தி பேமிலி மேன் வெப் தொடரை உருவாக்கி, இயக்கிய ராஜ் & டிகேயின் புதிய இந்தி வெப் தொடரில் விஜய் சேதுபதி நடிக்கிறார்.

இந்த புதிய வெப் தொடரையும் அமேசான் பிரைம் வீடியோவுக்காக இயக்குகிறார்கள். இந்தியின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஷாகித் கபூர் இதில் நடிக்கிறார். அவருடன் ராஷி கண்ணாவுக்கும் முக்கிய வேடம் தரப்பட்டுள்ளது. இந்த வெப்தொடரில் விஜய் சேதுபதி இணைந்து கொண்டதை அவருடன் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார் ராஷி கண்ணா.

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வந்தது. இந்நிலையில், அவருக்கு ஜோடியாக நடிக்க பிரபல தமிழ் நடிகை ரெஜினா கசன்ட்ரா ஒப்பந்தமாகி உள்ளார். நடிகை ரெஜினா நடிக்கும் முதல் வெப் தொடர் இதுவாகும். நடிகர் விஜய் சேதுபதியும், ரெஜினாவும் ஏற்கனவே ‘முகிழ்’ என்கிற தமிழ் படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.