சென்னை: பெட்ரோல், டீசல் மீது உயர்த்தப்பட்ட கலால் வரியை 2014 ஆம் ஆண்டில் இருந்ததுபோல குறையுங்கள் என பிரதமர் மோடிக்கு தமிழக நிதியமைச்சர் பிடிஆர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியாவில்  பெட்ரோல் டீசல் விலை ரூ.100ஐ தாண்டி போய்க்கொண்டிருக்கிறது. இதனால், சாமானிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட வருகின்றனர். இந்த நிலையில், நேற்று மாநில முதல்வர்களுடன் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக  பிரதமர் மோடி காணொளி வாயிலாக நடத்திய ஆலோசனையின்போது, பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்குமாறு தமிழகம் உள்பட சில மாநிலங்களை கேட்டுக்கொண்டார்.

இதற்கு பதில் கூறியுள்ள  தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மத்தியில் 2014ம் ஆண்டு மோடி தலைமையிலான பாஜக  ஆட்சிக்கு வந்ததில் இருந்து கடந்த 8 ஆண்டுகளாக பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்படும் மத்திய, மாநில அரசுகளின் வரி விகிதங்களை பட்டியலிட்டு காட்டியதுடன், முதலில் பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை 2014ம் ஆண்டு இருந்த அளவுக்கு குறையுங்கள் என்று தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து பிடிஆர் பதிவிட்டுள்ள டிவிட்டடில், கடந்த 2014 ஆம் ஆண்டின்போது பெட்ரோல் மீது ரூ.9.48 , டீசல் மீது ரூ.3.57 மட்டுமே கலால் வரியாக மத்திய அரசு வசூலித்து வந்ததென குறிப்பிட்ட தமிழக நிதியமைச்சர் பிடிஆர், கடந்த 8 ஆண்டுகளில் கலால் வரியானது பெட்ரோல் மீது சுமார் 200% அளவுக்கும் ,டீசல் மீதான கலால் வரி 500% அளவுக்கும் மத்திய அரசால் மேலும் உயர்த்தப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் மத்திய கலால் வரி 27% பிரிவில் வரி மற்றும் கூடுதல் கட்டணம் (27% இல் 96%) அடங்கும், மேலும் அதில் 4% மட்டுமே பகிரப்படுகிறது என்பதையும் மேற்கோள் காட்டியுள்ளார்.

தற்போது பெட்ரோல்,டீசல் மீது உயர்த்தப்பட்ட கலால் வரி விகிதத்தை கடந்த 2014 ஆம் ஆண்டில் இருந்ததுபோல குறைக்குமாறு பிரதமர் மோடிக்கு தமிழக நிதியமைச்சர் பிடிஆர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.