சென்னிமலை

சென்னிமலை அருகே உள்ள வெள்ளோடு கிராமத்தினர் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாகப் பட்டாசு இன்றி தீபாவளி கொண்டாடி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள வெள்ளோடு கிராமத்தில் 77.85 ஹெக்டேர் பரப்பளவில் பறவைகள் சரணாலயம் ஒன்று அமைந்துள்ளது.   ஈரோட்டிலிருந்து 12 கிமீ மற்றும் பெருந்துறையில் இருந்து 5 கிமீ தூரத்திலும் உள்ள இந்த வெள்ளோட்டில் ஒரு பெரிய ஏரி அமைந்துள்ளது.   இங்கு ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் முதல் ஏப்ரல் வரை பறவைகள் ஏராளமாக வருகின்றன.

இங்கு இந்திய நாட்டிலுள்ள பறவைகளான மஞ்சள் மூக்கு நாரை, கரண்டி வாயன், கூழைக்கடா, நத்தைக் குத்தி நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன் போன்றவை வருகின்றன. இவை தவிர, வெளிநாடுகளிலிருந்தும் 109 வகையான பறவைகள் வந்து செல்கின்றன.

குறிப்பாக, ஆஸ்திரேலியா மற்றும் ஆஸ்திரியா நாடுகளில் இருந்து பெலிகன் பறவைகள் பெருமளவில் இங்கு வருகின்றன. இங்கு வரும் பறவைகள் நான்கு மாத காலம் வரை தங்கியிருப்பதுடன் முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்து அவற்றுடன் திரும்பிச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளன

இவ்வாறு பறவைகள் வந்து போகும் காலத்தின் இடையில் தீபாவளி பண்டிகை வருகிறது.  எனவே இந்த சரணாலயத்தை சுற்றியுள்ள கவுண்டச்சிபாளையம், புங்கம்பாடி, மேட்டுப்பாளையம், செல்லப்பாளையம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பட்டாசுகளை வெடிக்காமல் கடந்த 50 ஆண்டுகளாக தீபாவளி கொண்டாடி வருகின்றனர்

இதைப் போல் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் வந்து செல்வதால் வேட்டங்குடி மற்றும் கொல்லக்குடி கிராம மக்கள் தீபாவளி நேரத்தில் பட்டாசு வெடிப்பதில்லை.  அத்துடன் நெல்லை மாவட்டத்தில் உள்ள கூந்தன்குளம் பகுதியிலும் இதே வழக்கம் உள்ளது.