சேலம்

சேலத்தில் உள்ள குகை என்னும் பகுதிக்கு அப்பெயர் வரக் காரணம்  குறித்த  நெட்டிசன் பதிவு இதோ.

சேலம் நகரின் குகை என்னும் பகுதி மிகவும் பரபரப்பான பகுதி ஆகும்.   இங்குப் பல வர்த்தக நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.   இந்தப் பகுதிக்கு இப்பெயர் வரக் காரணம் குறித்து நெட்டிசன் சிவா கேஜி முகநூலில் ஒரு பதிவு இட்டுள்ளார்.

அந்தப் பதிவில்

“சேலத்தை உள்ளடக்கிய கொங்குப் பகுதிகளில் சமணம் ,பவுத்தம் செழித்து இருந்த காலகட்டம்….கிபி இரண்டாம் நூற்றாண்டு முதல் கிபி ஏழாம் நூற்றாண்டு வரை…

சமணமும் பவுத்தமும் வீழ்ச்சியைச் சந்தித்த போது சமண பவுத்த சிலைகள் அகற்றப்பட்டும் சேதப்படுத்தப்பட்டும் உருமாற்றம் செய்யப்பட்டும் கிராம தெய்வங்களாக மாற்றமடைந்தன….

உதாரணத்திற்கு… சேலம் அரசு மருத்துவமனை எதிரில் இருக்கும் தலைவெட்டி  முனியப்பன் கோவில்…
அச் சிலையானது தலை வெட்டப்பட்டு பின் ஈயம் காய்ச்சி ஒட்டப்பட்ட புத்தர் சிலை என்பது வரலாற்று அறிஞர்கள் கூற்று…

அதே காலகட்டத்தில் திருமணிமுத்தாற்றங்கரையின் தெற்கு பகுதியில் (தற்போது அம்பலவாணர் சுவாமி கோவில் எதிரில் உள்ள முனியப்பன் கோவில் வீதி) ஒரு குகை இருந்ததாகவும் அதில் ஒரு மவுன சாமியார் வாழ்ந்து வந்ததாகவும் அவரை தரிசித்தாலே  குறைகள் தீர்வதால் மக்களின் பெருமதிப்பை பெற்று இருந்தார் அவர் என்றும் சொல்லப்படுகிறது……

அவரின் இருப்பிடமான குகையே அவரின் அடையாளமாகி குகை சாமியார் என  பெயர் ஆகியது….
பின் அதுவே இப்பகுதியின் பெயருமாகியது….

வரலாற்று ஆய்வாளர்கள் இங்கு சமணர்கள் வாழ்ந்த குகை இருந்திருக்கக் கூடும் எனச் சொல்வர்….

சமண வீழ்ச்சியின் போது தலைவெட்டி முனியப்பன் உருவானது போல் இங்கும்  அந்த மவுன சாமியாரின் சிலை ஆதி முனீஸ்வரன் சிலையாக பெயர் மாற்றம் பெற்றது…

அவர் வாழ்ந்த குகையை மூடி அதன் மேல் அச்சிலையும் நிறுவப்பட்டு விட்டது  இப்போது…..

அந்த குகையானது சித்தர் கோவிலுக்கும், கரிய பெருமாள் கரட்டுக்கும்,குமரசாமிபட்டி முருகன் கோவில் மலைக்கும் செல்லும் எனவும் அதன் வழியாகத்தான் அவர் சென்றுவருவார் என்பதும் செவி வழி செய்தி….

இப்பகுதிக்குக் குகை எனப் பெயர் வரக்காரனமான இவரின் பெயர் சரிவர  தெரியவில்லை…..

இதுவே குகை என பெயர் வரக்காரனம்…

ஒரு பெரிய வரலாற்றுத் தொடர்ச்சியையே தன்னுள் வைத்திருக்கும் எந்த ஒரு அடையாளமும் இன்றி மிகச் சாதாரணமாக இருக்கிறது இக் கோவில் …
உள்ளே அமர்ந்திருக்கும் முனிவரைப்போல்…

எனப் பதிந்துள்ளார்.