யநாடு

ராகுல் காந்தி வயநாடு தொகுதியிலும் போட்டியிடுவது குறித்த ஆய்வு

காங்கிரஸ் கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியலில்  அமேதி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.     ராகுல் காந்தி தென் இந்தியாவில் இருந்து போட்டியிடப் போவதாக செய்திகள் வந்தன.   அதை உறுதிப்படுத்துவது போல தற்போது ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிட உள்ளதாக காங்கிரஸ் அறிவித்தது.

வயநாடு மக்களவை தொகுதியில் உள்ள ஏழு சட்டப்பேரவை தொகுதிகளில் மூன்று வயநாடு மாவட்டத்திலும்,  மூன்று மலப்புரம் மாவட்டத்திலும் ஒரு தொகுதி  கோழிக்கோடு மாவட்டத்திலும் உள்ளது.   இந்த பகுதிகளில் காங்கிரஸ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகளுக்கு நல்ல செல்வாக்கு உள்ளதால்  காங்கிரஸ் கூட்டணி இங்கு ராகுல் போட்டியிட விரும்பியது.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஷாநவாஸ் இந்த தொகுதியில் 2009 மற்றும் 2014 ஆம் ஆண்டு தொடர்ந்து வெற்றி பெற்றார்.  கடந்த 2018 நவம்பரில் அவர் மரணம் அடைந்ததால் தற்போது அந்த தொகுதி காலியாக் உள்ளது.    காங்கிரஸ் வேட்பாளரான ஷா நவாஸ் 2009 ஐ விட 2014 ஆம் ஆண்டு தேர்தலில் குறைவான வித்தியாசத்தில் வென்றாலும் இது காங்கிரஸ் தலைவருக்கு பாதுகாப்பான தொகுதி என காங்கிரஸ் கருதுகிறது.

கேரளாவை சேர்ந்த ஒரு அரசியல் விமர்சகர், “அமேதி தொகுதியில் ராகுல் வெற்றி பெறுவது சந்தேகம் என காங்கிரஸ் எண்ணுவதாக தோன்றுகிறது.   மற்ற தென் இந்திய தொகுதிகளை விட வயநாடு காங்கிரசுக்கு பாதுகாப்பான தொகுதி ஆகும்.    அதுவும் இங்கு ராகுல் காந்தியே போட்டியிடும் போது வெற்றிக்கு சந்தேகமே கிடையாது.    கேரளாவை பொறுத்த வரை வயநாடு என்றும் காங்கிரசின் தொகுதிதான்” என தெரிவித்துள்ளார்.

வயநாடு தொகுதியில் 41% இந்துக்களும் 49% இஸ்லாமியர் மற்றும் கிறித்துவர்களும் உள்ளனர்.   இதனால் பாஜகவுக்கு நாடெங்கும் எழுந்துள்ள எதிர்ப்பு இங்கும் எதிரொலித்து ராகுல் வெற்றி பெறுவார் என காங்கிரஸ் எண்ணுவதாக கூறப்படுகிறது.

கடந்த 2009 ஆம் வருட தேர்தலில் காக்கிரஸ் மொத்தமுள்ள வாக்குகளில் 49.86% வாக்குகள் பெற்றது.   காங்கிரசை எதிர்த்து நின்ற இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளருக்கு 31.23% வாக்குகள் கிடைத்தன.    அப்போது 1.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற காங்கிரஸ் கட்சி  2014 ஆம் ஆண்டு தேர்தலில் 20,000 வாக்குகளுக்கு சற்றே அதிக வித்தியாசத்தில் வென்றது.

ஆயினும் நாடெங்கும் பாஜக அலை வீசிய போதும் இந்த தொகுதியில் காங்கிரஸ் வென்றது..  தற்போது காங்கிரஸ் தலைவரே வேட்பாளர் என்பதால் இந்த தொகுதியில் அதிக வித்தியாசத்தில் காங்கிரஸ் வெல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அமேதி தொகுதியில் ராகுலை எதிர்த்து மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி போட்டியிடுகிறார்.   சென்ற 2014 தேர்தலில் அவர் சுமர் 1 லட்சம் ஓட்டுக்கு மேல் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த போதிலும் காங்கிரஸ் பெற்ற வாக்கு எண்ணிக்கை குறைந்து இருந்தது.   கடந்த 2004 ஆம் வருடம் 66% வாக்குகளும், 2009 ஆம் வருடம் 71% வாக்குகளும் பெற்ற காங்கிரஸ் 2014 ஆம் வருடம் 37% வாக்குகள் மட்டுமே பெற்றது.

அத்துடன் 2017 ஆம் வருடம் நடந்த சட்டப்பேரவை தேர்தலும் காங்கிரசுக்கு சற்று கவலையை அளித்துள்ளதாக சொல்லப்படுகிறது.   பாஜக அப்போது அமேதி தொகுதியில் உள்ள ஐந்து சட்டப்பேரவை தொகுதிகளில் நான்கு தொகுதிகளில் வென்றது.  அது மட்டுமின்றி ஸ்மிரிதி இராணி இந்த தொகுதியில் தோல்வி அடைந்த போதிலும் தொடர்ந்த் இந்த தொகுதிக்கு வந்து பல பேரணிகளிலும் பொதுக் கூட்டங்களிலும் காங்கிரஸ் தலைவரை கடுமையாக தாக்கி பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.