டில்லி

விவசாயிகளிடம் குறைந்த விலைக்குக் கொள்முதல் செய்யப்படும் வெங்காயம் அதிகமான விலைக்கு விற்கப்படுவது குறித்த ஒரு ஆய்வு செய்தி

நாடெங்கும் விண்ணைத் தொடும் அளவுக்கு வெங்காய விலை உயர்ந்துள்ளது.   அனைத்து செய்தி ஊடகங்களின் தலைப்புச் செய்தியில் இப்போது வெங்காயம் இடம் பெற்றுள்ளது.   வெங்காயத்தை வெட்டும் போது வரும் கண்ணீர் விலையைக் கேட்டதுமே வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.   உதாரணமாக பெங்களூருவில் மற்றும் கொல்கத்தாவில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.200 ஐ எட்டி உள்ளதால் பலரும் வெங்காயம் வாங்குவதை நிறுத்தி உள்ளனர்.

மேற்கு வங்கத்தில் உள்ள கிழக்கு மிதினாப்பூர் மாவட்டத்தில் ரூ.50,000 மதிப்புள்ள வெங்காயம் ஒரு மண்டியில் இருந்து கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.   சமீபத்தில் மகாராஷ்டிராவில் இருந்து உத்தரப்பிரதேசம் சென்றுகொண்டிருந்த ஒரு லாரி ரூ.22 லட்சம் மதிப்புள்ள வெங்காயத்துடன் திருடப்பட்டுள்ளது.   காவலர்கள்  அதைத் தேடிக் கண்டுபிடித்த போது அதில் ஒரு வெங்காயம் கூட இல்லை.

காலம் தவறிய பருவமழையால் கடும் வெள்ளம் ஏற்பட்டு மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களில் வெங்காயப்பயிர் அழிந்தது.  இந்த மாநிலங்கள் அதிக அளவில் வெங்காயம் விளைவிக்கும் மாநிலங்கள் ஆகும்.  குறிப்பாக அறுவடை நேரத்தில் இந்த வெள்ளம் ஏற்பட்டுள்ளது.    எனவே தட்டுப்பாடு காரணமாக விலை உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதே வேளையில் இந்த விலை உயர்வினால் வெங்காய விவசாயிகளுக்குப் பலன் கிடையாது எனக் கூறப்படுகிறது.    வெங்காய விவசாயிகளுக்குக் கிலோவுக்கு ரூ.15 மட்டுமே கிடைப்பதாகச் சொல்லப்படுகிறது.    அப்படி இருக்க வெங்காய விலை அதிக அளவில் உயர்ந்துள்ளதற்கு முக்கிய காரணம் இடைநிலை தரகர்கள் மற்றும் போக்குவரத்து நிறுவனங்கள் எனக் கூறப்படுகிறது.   பலரும் வெங்காயத்தை தங்கள் குடோனில் பதுக்கி வைத்துள்ளதால் அதிக அளவில் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயர்ந்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த மாதம் 1ஆம் தேதி அன்று மத்திய அரசு துருக்கியில் இருந்து சுமார் 11,000 டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்படும் என அறிவித்துள்ளது.   இதனால் வெங்காய ஏற்றுமதி நாடான இந்தியா தற்போது வெங்காய இறக்குமதி நாடாக மாறி உள்ளது.  ஏற்கனவே 6,090 டன் வெங்காயம் எகிப்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.   அரசு தரப்பில் வெங்காய பதுக்கலைத் தடுக்க கடும் சோதனைகள் நடந்து வருகின்றன.