கர்நாடகத்தில் சிறப்பு ரயில்கள்  ரத்து செய்யப்பட்டதன் மர்மம்..

Must read

கர்நாடகத்தில் சிறப்பு ரயில்கள்  ரத்து செய்யப்பட்டதன் மர்மம்..

கர்நாடகத்தில் பி.எஸ்.எடியூரப்பா தலைமையிலான  பா.ஜ.க..ஆட்சி நடந்து வருகிறது.

பீகார், உத்தரப்பிரதேசம், ஒடிசா உள்ளிட்ட வெளி மாநிலங்களைச் சேர்ந்த சில லட்சம் தொழிலாளர்கள் அங்குக் கட்டிடத் தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகிறார்கள்.

ஊரடங்கு காரணமாக வேலை இல்லாததால், சொந்த ஊருக்குச் செல்ல விரும்பினர்.

அதற்கான ஏற்பாடுகளை மாநில பா.ஜ.க. அரசு மேற்கொண்டது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வேக்கு, கர்நாடக வருவாய்த் துறை முதன்மை செயலாளர் மஞ்சுநாத் கடிதம் எழுதி இருந்தார்.

இதனை அடுத்து, பெங்களூருவில் இருந்து இரு நாட்களில் 10 சிறப்பு ரயில்கள், வெளி மாநில தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு, அவர்களின் சொந்த ஊர்களுக்குச் செல்வதாக இருந்தது.

இந்த நிலையில், அதே முதன்மை செயலாளர் மஞ்சுநாத், ‘’இப்போதைக்குச் சிறப்பு ரயில்கள் தேவை இல்லை’’ என மற்றொரு கடிதம் எழுத-

அந்த சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதன் பின்னணியில், நிகழ்ந்த சம்பவங்கள் அதிர வைக்கும் ரகம்.

மூன்றாம் கட்ட ஊரடங்கு தொடங்கியுள்ள சூழலில், கட்டுமான பணிகளை  ‘ஆரம்பிக்கலாம்’’ என மத்திய அரசு பச்சைக்கொடி காட்டியுள்ளது.

 ஏற்கனவே ஒரு லட்சம் கட்டிடத் தொழிலாளர்கள் பெங்களூருவில் இருந்து சொந்த ஊர்களுக்குப் போய் விட்டார்கள்.

எஞ்சிய தொழிலாளர்களும் சென்று விட்டால், கட்டுமான தொழிலைத் தொடர முடியாது எனப் பெங்களூருவில் உள்ள, ரியல் எஸ்டேட் அதிபர்கள்  அச்சம் அடைந்தனர்.

,மிரண்டு போன, அந்த கட்டிடத் தொழில் முதலாளிகள், முதல்வர் பி.எஸ்.எடியூரப்பாவைச் சந்தித்து முறையிட்டனர்.

இருக்கும் தொழிலாளர்களையும் அனுப்பி விட்டால், கட்டிட பணிகள் முடங்கிப் போகும் எனத்  தெரிவித்தனர்.

இதனையடுத்தே, அந்த தொழிலாளர்களைச் சொந்த ஊருக்குச் செல்லாமல் தடுக்கும் வகையில், சிறப்பு ரயில்களை, மாநில அரசு ரத்து செய்து விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

‘’வெளிமாநில தொழிலாளர்களைப் பிணைக்கைதிகளாக பா.ஜ.க. அரசு மாற்றி விட்டது’’ என்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் புகார் தெரிவித்துள்ளன.

– ஏழுமலை வெங்கடேசன்

More articles

Latest article