குழந்தைகளின் கண்ணைக் குத்திய  ராமாயண அம்புகள்’..

40 ஆண்டுகளுக்கு முன்பு தூரதர்ஷனில் ஒளிபரப்பான ராமாயணமும், மகாபாரதமும் ஊரடங்கு காரணமாக மீண்டும் ஒளிபரப்பாகி,  பெரும் ‘’பார்வையாளர்’’ கூட்டத்தை, தூரதர்ஷனுக்கு உருவாக்கிக் கொடுத்துள்ளன.

ஆனால் அந்த இதிகாசங்கள் சில குழந்தைகளின் பார்வை இழப்புக்குக் காரணமாக அமைந்து விட்டதாக ஐதராபாத்தில் இருந்து அதிர வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த இரு கதைகளிலும் வில்-அம்புகள் ’’தனி பாத்திரங்களாக’’ இடம் பெற்றுள்ளன என்று சொன்னால் தப்பு இல்லை.

விளைவு?

சீரியல் பார்க்கும் சிறிசுகள், தென்னங்குச்சியில் அம்புகள் தயாரித்து, வில் ஏந்தி ‘விசுக்’ ’விசுக்’  என, அதனை தங்களுடன் விளையாடும் சக நண்பர்களை நோக்கி வீசியுள்ளனர்.

இந்த ராமபாணங்கள், ’’உள்ளூர் ராவணன்’’களின்  கண்களைத் துளைத்துள்ளன.

ஆம்.

செயற்கையாகச் சிறுவர்கள் தயாரித்த வில்-அம்புகள், தங்களோடு விளையாடும் சிறுவர்களின் விழிகளில் பாய்ந்து, இதுவரை சுமார் 12 இளம் சிறார்களின் பார்வையைப் பறித்துள்ளதாகத் திடுக்கிடும் செய்தி வெளியாகியுள்ளது.

இவர்கள்  அனைவரும் ஐதராபாத் புறநகர்ப் பகுதியைச் சேர்ந்த (5 முதல் 10 வயதிலான) சிறுவர்கள் ஆவர்.

– ஏழுமலை வெங்கடேசன்