விஜயவாடா:

தெலுங்கு தேசம் பாஜ கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரத் தயாராக இருப்பதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்ட பிறகு, ஆந்திராவுக்கு பட்ஜெட்டில் சிறப்பு நிதி ஒதுக்கப்படும் என மத்திய அரசு அறிவித்த நிலையில், அது குறித்தும் இந்த மாதம் தாக்கல் செய்த மத்திய நிதி நிலை அறிக்கையில் ஏதும் தெரிவிக்காததால், தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். பாராளுமன்ற வளாகத்திலும் போராட்டம் நடத்தினர்.

இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் காரணமாக பாஜ – தெலுங்குதேசம் இடையே உள்ள கூட்டணியில் விரிசல் ஏற்படும் சூழ்நிலையை உருவாக்கியது. ஏற்கனவே  உறுதி அளித்தபடி பாஜக அரசு நடந்துகொள்ளவில்லை என்று சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டி வந்தார்.

அதைத்தொடர்ந்து கடந்த வாரம்  பட்ஜெட்  ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய சந்திரபாபு நாயுடு, மத்திய  பாஜக அரசை கடுமையாக விமர்சித்தார். அப்போது, அரசியல்வாதிகள் தங்களை ஏமாற்றுகிறார்கள் என மக்கள் நினைத்தால், அவர்கள் தூக்கி எறிந்துவிடுவார்கள் , மக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படா விட்டால்,  மக்கள் ஏமாற்றப்படுகிறோம் என உணர்ந்துவிட்டால்,  நாம் மக்களின் நம்பிக்கையை இழந்து விடுவோம். இதன் காரணமாக அவர்கள் தேர்தலின்போது கடுமையான முடிவுகளை எடுக்க நேரிடும் என்று எச்சரித்தார்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற கட்சி நிர்வாகிளுடனான ஆலோசனையை தொடர்ந்து,  தங்கள் மாநிலத்திற்கான தேவைகளை நிறைவேற்றுவதற்காக மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம் என்றும்,  இயலாத பட்சத்தில், மற்ற கட்சிகளுடன் இணைந்து பா.ஜ.க அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என்றார்.

இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் கடைசி கட்ட முயற்சியாக தான் இருக்கும் என்றும் பாஜக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.