கரூர்: ஆசிரியையிடம் பாலியல் அத்துமீறியதாக  கொடுக்கப்பட்ட புகாரில் நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகம், ஆர்டிஓ மூலம் விசாரணை நடத்தி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாலியல் புகாரின்மீது பாய்ந்து பாய்ந்து நடவடிக்கை எடுக்கும் காவல்துறை இந்த விவகாரத்தில் பாரபட்சம் காட்டுவதாக விமர்சனம் எழுந்துள்ளது.

பிரபல பரதநாட்டியக் கலைஞர் ஜாகிர் உசேன், சில மாதங்களுக்கு முன்பு, திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வழிபட சென்றபோது, அவர் இந்து அல்லாதவர் என்ற காரணத்தால் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் அப்போது விவாதமானது. இதனைத் தொடர்ந்து, திமுக அரசு, அவரை அழைத்து, ப தமிழ்நாடு கலை பண்பாட்டுத்துறையில் 17 மாவட்ட அரசு இசைப்பள்ளி கலையியல் அறிவுரைஞராக நியமனம் செய்து அறிவித்தது.

இதையடுத்து,  கரூர் மாவட்ட அரசு இசைப்பள்ளிக்கு ஆய்வு செய்ய சென்ற ஜாகிர் உசேன், அங்குள்ள பரதநாட்டிய ஆசிரியையிடம் அத்துமீறியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக அந்த ஆசிரியை கலை – பண்பாட்டுத் துறை இயக்குநருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அவரது கடிதத்தில்,  “கரூர் மாவட்ட அரசு இசைப் பள்ளிக்கு ஆய்வு செய்ய வந்த ஜாகிர் உசேன், முதலாம் ஆண்டு மாணவிகளை நடனமாட சொல்லி பார்த்தார். அப்போது அனைத்து மாணவ, மாணவிகள், தலைமை ஆசிரியை, அனைத்து ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் முன்னிலையில், நீங்களே இன்னும் கற்றுக் கொள்ளவேண்டும் என்றார். அதற்கு கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக இணையவழிக் கல்வி மட்டுமே கற்பிக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.

தலைமை ஆசிரியர் அறைக்கு சென்று என்னை மட்டும் உள்ளே வரச்சொல்லி கதவை மூடி என்னிடம் “நீங்கள் எல்லாம் வெட்டி சம்பளம் வாங்குகிறீர்கள். எனது யூடியூப் பார்த்து நிறைய கற்றுக்கொள்ளுங்கள்” எனக் கூறி எப்படி நடனமாடவேண்டும் என, என் உடல் மேல் கை வைத்து நடன அசைவுகளை சொல்லித் தருவது போல் அநாகரிகமாக நடந்து கொண்டார்.

“ஏப்ரல் மாதம் 3 பயிலரங்கம் நடத்த போகின்றேன். அப்போது வாருங்கள் உங்களுக்கு எல்லாம் வகுப்பு எடுக்கவேண்டும்” என்றார். அதன்பின் நானாக கதவை திறந்து வெளியே வந்து விட்டேன். அப்போது அனைவரது கவனமும் என் மீதே இருந்தது. இதனால் மனம் வேதனை அடைந்து நாம் உயிர் வாழ வேண்டுமா தற்கொலை செய்துக் கொள்ளலாம் என தோன்றியது” என்று ஆசிரியை தெரிவித்துள்ளார்.

இதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், மார்ச் 31-ம் தேதி சென்னையில் உள்ள கலை – பண்பாட்டு துறை இயக்குநரகத்திற்கு நேரில் சென்று புகார் தெரிவித்தார்.  இதுகுறித்து முதல்வர், கரூர் மாவட்ட ஆட்சியர், மின்சாரத்துறை அமைச்சர் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுத்து, தப்பு செய்தவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்கவேண்டும் என்று தெரிவித்தார்.

இதுதாடர்பாக பாஜகவினர் போராட்டமும் நடத்தினர். இது சலசலப்பை ஏற்படுத்தியது.

இதன்பிறகு,  இசைப் பள்ளி ஆசிரியையின் புகார் குறித்து கலையியல் அறிவுரைஞர் ஜாகிர் உசேன், இந்த விவகாரம் குறித்து கலை பண்பாட்டு இயக்கக இயக்குநருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், பரதநாட்டிய ஆசிரியையின் புகார் குறித்து விசாகா கமிட்டி விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியுள்ளார்.

மேலும், அந்தக் கடிதத்தில், “சம்பந்தப்பட்ட பள்ளியில் ஆய்வு மேற்கொண்டபோது மாணவர்களுக்கு பாடத்திட்டத்தில் வரிசைப்படுத்தப்பட்டபடி சரியான வகையில் கற்பிக்கப்படாதது கண்டறியப்பட்டது. இதுகுறித்து தலைமை ஆசிரியர் அறையில் அவர் முன்னிலையில் ஆசிரியரிடம் விளக்கம் கோரப்பட்டது. ஆனால், ஆசிரியையிடமிருந்து ஒழுங்கான விளக்கம் கிடைக்கப்பெறவில்லை.

இந்நிலையில், பரதநாட்டிய ஆசிரியை அரசியல் தூண்டுதலின் பேரில் சில வெளி அமைப்புகளுடன் கைகோர்த்து என்னை போன்ற சிறுபான்மையினர் மீது சுமத்தி யுள்ள குற்றச்சாட்டை முற்றிலும் மறுக்கிறேன். விசாகா கமிட்டி அமைத்து விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும்” என்று கோரியுள்ளார்.

இதனிடையே, கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் உத்தரவின் பேரில் கரூர் கோட்டாட்சியர் என்.எஸ்.பாலசுப்பிரமணியம், வட்டாட்சியர் பன்னீர்செல்வம் ஆகியோர் கரூர் மாவட்ட இசைப்பள்ளிக்கு திங்கள்கிழமை (ஏப்ரல் 4) சென்று சம்பந்தப்பட்ட ஆசிரியையிடம் சுமார் 1 மணி நேரம் விசாரணை நடத்தினர். மேலும், விசாரணை அறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாலியல் ரீதியான புகார் என்றாலே, சம்பந்தப்பட்டவர் உடனே இடைநீக்கம் செய்யப்பட்டு, அவர்மீது விசாரணை நடத்தப்பட வேண்டும். ஆனால், இந்த விஷயத்தில் தமிழக அரசு மவுனம் சாதித்து வருகிறது. பாலியல் சீண்டல் என்றாலே உடனே ஓடிவந்து கைது செய்யும் காவல்துறை, இந்த விஷயத்தில் மவுனம் காக்கிறது. இது கேள்விக்குறியாகி உள்ளது. 

பெண் குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுக்கொடுத்த மாஸ்டர்களும், கராத்தே கற்றுக்கொடுத்த மாஸ்டர்களும் பாலியல் புகார் காரணமாக கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பெண்ணின் உடலைத்தொட்டு பாலியல் சேட்டை செய்யும் வகையில் சீனியர் கலைஞர் ஒருவரிடம் அத்துமீறிய ஜாகிர்உசேன் மீது காவல்துறை நடவடிக்டிக எடுக்காதது மர்மமாகவே உள்ளது?