சென்னை: தங்க நகை அடகுக்கு கடும் கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள நிலையில், அதற்கு தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சாமானியர்களின் வாழ்வாதாரத்திற்கு உபயோகப்படும், தங்க நகை அடமானம் வைப்பதில் சாமானியர்களின் தலையில் இடியை இறக்கி இருக்கிறது ரிசர்வ் வங்கி என கடுமையாக சாடியுள்ளார்.

அரசு மற்றும் தனியார் வங்கிகள், மற்றும் நிறுவனங்களில் தங்க நகை அடமானம் வைப்பதில் பல புதிய விதிமுறைகளைக் கொண்டு இந்திய ரிசர்வ் கொண்டு வந்துள்ளது. அதன்படி,
• தங்க நகையின் மதிப்பில் 75 சதவீதம் மட்டுமே நகைக்கடன் வழங்கப்படும். எடுத்துக்காட்டாக நகையின் மதிப்பு 100 ரூபாய் என்றால் 75 ரூபாய் வரை மட்டுமே நகைக்கடன் வழங்கப்படும்
• தங்க நகை கடன் வாங்குபவர்கள் நகைக்கு நீங்கள்தான் உரிமையாளர் என்ற ஆதாரத்தை வழங்க வேண்டும்.
• தங்க நகையின் தூய்மைத்தன்மை குறித்து வங்கியிடம் சான்றிதழ் பெற வேண்டும்
• குறிப்பிட்ட வகையிலான தங்கங்களுக்கு மட்டுமே நகைகடன் வழங்கப்படும்.
• நகை 22 காரட் அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்
• வெள்ளி நகைகளுக்கும் நகைக்கடன் பெறலாம்
• தனிநபர்கள் ஒரு கிலோ தங்க நகை வரை மட்டுமே அடக்கு வகைக்க முடியும்.
• நகைக்கடனாக பெறப்படும் தங்கம் 22 காரட் மதிப்பின் அடிப்படையில் கடன் வழங்கப்படும்
• நகைக்கடன் ஒப்பந்தத்தில் முழுமையான தகவல் இடம்பெற்றிருக்க வேண்டும்.
• நகைக்கடன் வாங்கியவர் அந்த கடனை திரும்ப செலுத்திய 7 வேலை நாட்களில் நகையை திரும்பி ஒப்படைக்க வேண்டும்.
• 7 வேலை நாட்களில் ஒப்படைக்கவில்லையென்றால் கடன் கொடுத்தவர் (வங்கிகள்) ஒரு நாளைக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதமாக கொடுக்க வேண்டும்.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது
ரிசர்வ் வங்கியின் இந்த உத்தரவு மக்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களே பெரும்பாலும் தங்களது அவசர தேவைகளுக்கு தங்க நகைக் கடன் போன்றவற்றைச் சார்ந்திருக்கும் சூழலில் அதன் மீது மத்திய ரிசர்வ் வங்கி விதித்திருக்கும் புதிய விதிமுறைகள் சாமானிய மக்களை பாதிக்கும் செயலாக அமைந்துள்ளது.
அதேபோல தங்கம் தங்களுடையது தான் என்பதற்கான ஆதாரத்தைக் காட்ட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது தங்கத்தை முறையாகக் கடையில் வாங்கினோம் என்பதற்கான பில் சமர்ப்பிக்க வேண்டும். இதுவே பலருக்கும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் நமது நாட்டில் அவ்வளவு சீக்கிரம் யாரும் தங்கத்தை விற்க மாட்டார்கள். எவ்வளவு கஷ்டப்பட்டாலும் தங்கத்தை வைத்திருக்கவே பார்ப்பார்கள். அந்தளவுக்குத் தங்கம் என்பது நமது கலாச்சாரத்தில் முக்கிய இடம் இருக்கிறது.
இந்த நிலையில் ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பு குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு காட்டமாக விமர்சித்துள்ளார்.
தங்க நகை அடமானம் வைப்பதில் பல புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்து சாமானியர்களின் தலையில் இடியை இறக்கி இருக்கிறது ரிசர்வ் வங்கி. ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களே பெரும்பாலும் தங்களது அவசர தேவைகளுக்கு தங்க நகைக் கடன் போன்றவற்றைச் சார்ந்திருக்கும் சூழலில் அதன் மீது மத்திய ரிசர்வ் வங்கி விதித்திருக்கும் புதிய விதிமுறைகள் சாமானிய மக்களை பாதிக்கும் செயலாக அமைந்துள்ளது. குறிப்பாக நகையின் மதிப்பில் முன்பை விட 5% குறைத்து, 75% தான் கடன் வழங்கப்படும் என்ற புதிய விதிமுறை அவசர தேவைக்காக வங்கிகளை நாடிவரும் மக்களை நேரடியாகப் பாதிக்கும் முடிவாகும்.
அவசரம் என்று வரும் மக்களை அத்தியாவசியமற்ற விவரங்களையும், ஆதாரங்களையும் கேட்டு அலைக்கழிக்கும் இந்த புதிய நடைமுறையை மத்திய ரிசர்வ் வங்கி உடனடியாக கைவிட வேண்டும். அடமானம் வைத்த நகையை முழுவதுமாக மீட்ட பிறகே மீண்டும் அந்த நகையை அடமானம் வைக்க முடியும் என்ற புதிய விதிமுறையைக் கடந்த மாதம் RBI கொண்டு வந்த அதிர்ச்சியிலிருந்து மக்கள் இன்னும் மீளாத நிலையில், தற்போது மேலும் புதிய 9 விதிமுறைகள் என்ற பெயரில் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளது, நேரடியாக ஏழை எளிய மக்களைப் பாதிக்கும் செயலாகும்.
RBI உடனே இத்தகைய கட்டுப்பாடுகளைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.
I urge the RBI to immediately withdraw the newly imposed restrictions on gold loans. Reducing the loan-to-value ratio to 75% and burdening borrowers with excessive documentation gravely affects poor and middle-class families who depend on such loans during emergencies. At a time when people are still reeling from the earlier rule that disallows re-pledging until full repayment, the introduction of 9 more rigid guidelines is deeply insensitive. These measures amount to systemic injustice against the vulnerable. The RBI must adopt compassionate, people-centric policies.
இவ்வாறு கூறி உள்ளார்.