டெல்லி:

நடப்பு கணக்குகளில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாட்டை ரிசர்வ் வங்கி தளர்த்தியுள்ளது.


புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று கடந்த நவம்பர் 8ம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து வங்கிகளில் இருந்து பணம் எடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

பின்னர் இந்த கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. வங்கி சேமிப்பு கணக்கில் இருந்து வாரத்திற்கு ரூ. 24 ஆயிரம் வரை எடுக்கலாம் என்ற உத்தரவு தற்போது அமலில் உள்ளது. அதேபோல் ஏடிஎம்.களில் இருந்து ஒரு நாளைக்கு ரூ. 10 ஆயிரம் வரை எடுக்கலாம் என்று அறிவித்துள்ளது.
இதேபோல் வியாபாரிகள் பயன்படுத்தும் நடப்பு கணக்குகளுக்கும் (கரன்ட் அக்கவுன்ட்) கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வரும் 1ம் தேதி முதல் நடப்பு கணக்குகளில் இருந்து பணம் எடுக்க எவ்வித கட்டுப்பாடும் இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

சேமிப்பு கணக்குகள் மீதான கட்டுப்பாடுகளை நீக்க இன்னும் சில காலம் தேவை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பணமதிப்பிழப்பு அறிவிப்பால் தொய்வடைந்துள்ள தொழில் மீண்டும் துளிர்த்தெளும் என்று வியாபாரிகள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.