கனடாவில் இயங்கிவந்த சீக்கிய பிரிவினைவாத அமைப்பான காலிஸ்தான் தலைவர் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்ட விவகாரம் மற்றும் அமெரிக்காவில் செயல்பட்டு வரும் சீக்கிய பிரிவினைவாத அமைப்பின் தலைவரான குருபத்வந் சிங் பன்னு-வை கொல்ல திட்டம் தீட்டியது ஆகிய விவகாரங்களை அடுத்து இந்திய உளவுப்பிரிவு RAW அமைப்பைச் சேர்ந்தவர்களை அமெரிக்கா வெளியேற்றியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக கனடாவில் உள்ள ஒட்டாவா நகரில் செயல்பட்டு வந்த ரா உளவுப்பிரிவு அதிகாரி பவன் ராய் ஏற்கனவே வெளியேற்றப்பட்ட நிலையில் தற்போது அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கொ நகர ரா உளவுப்பிரிவு தலைவரும் வெளியேற்றப்பட்டுள்ளார்.

அமெரிக்கா, கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகளுடன் இந்தியா செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் எழுதப்படாத விதிகளைக் கொண்டு இயங்கி வரும் ரா அமைப்பு முதல் முறையாக வடஅமெரிக்காவில் முடக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஜூன் மாதம் வாஷிங்டன் டி.சி. பகுதி ரா தலைவர் ஓய்வு பெற்ற நிலையில் அவருக்கு மாற்றாக எந்த ஒரு அதிகாரியையும் நியமிக்க இந்த பிராந்தியத்தில் இயங்கிய வரும் ரா அமைப்பை கண்காணித்து வரும் பிரிட்டன் அரசு நிறுத்திவைத்தது.

அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இந்திய அதிகாரிகள் அத்துமீறியதை அடுத்து அமெரிக்கா, கனடா மற்றும் பிரிட்டன் அரசுகள் இந்தியா மீது கோபமடைந்துள்ள நிலையில் இந்திய உளவுப் பிரிவை தடை செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

2013ம் ஆண்டு தமிழ்நாடு கேடர் ஐ.பி.எஸ். அதிகாரி மற்றும் 2001ம் ஆண்டு தெலங்கானா கேடர் ஐ.பி.எஸ். அதிகாரி என இரண்டு பேர் வெளியேற்றப்பட்ட நிலையில் ஒருவர் சான்பிரான்ஸிஸ்கொ நகர உளவுப் பிரிவு தலைவராகவும் மற்றொருவர் லண்டன் நகர உளவுப் பிரிவு அதிகாரியாகவும் இருந்தவர்கள் என்று ‘தி பிரிண்ட்’ நாளிதழ் தெரிவித்துள்ளது.

1968ம் ஆண்டு இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது செயல்படுத்தப்பட்ட இந்த உளவு அமைப்பு முதல்முறையாக வடஅமெரிக்காவில் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சீக்கிய பிரிவினைவாத அமைப்பின் தலைவரை கொல்ல திட்டம் தீட்டியதாக இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் மீது அமெரிக்காவில் வழக்கு