கொழும்பு:

இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரவிந்திர ஜடேஜா இலங்கைக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணியினர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகின்றனர். இதில் 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. 2வது டெஸ்ட் போட்டியில் 58வது ஓவரை ஜடேஜா வீசினார். அப்போது பந்தை பெற்ற இவர் கிரீசில் நின்ற இலங்கை வீரர் கருணாரத்னேவை நோக்கி ஆபத்தான முறையில் வீசினார்.

போட்டி முடிந்ததும் அம்பயர்கள் ரோட் டக்கர், புரூஸ் ஆக்சன் போர்டு ஆகியோர் இது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலடம் புகார் அளித்தனர். இது ஐசிசி விதிமுறையை மீறும் செயலாகும். இதற்கு அபராதமாக ஜடேஜாவுக்கு 3 புள்ளிகள் தரப்பட்டன.

ஏற்கனவே கடந்த அக்டோபரில் நியூசிலாந்துக்கு எதிராக இந்தூரில் நடந்த போட்டியில் விதி மீறலுக்காக ஜடேஜாவுக்கு 3 புள்ளிகள் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.

ஐசிசி விதிப்படி 4 புள்ளிகள் அல்லது அதற்கு மேற்பட்ட அபராத புள்ளிகள் பெற்றால் ஒரு டெஸ்ட் அல்லது 2 ஒரு நாள் போட்டி, அல்லது இரு 20:20 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படும். இந்த வகையில் ஜடேஜாவுக்கு இலங்கைக்கு எதிரான 3வது டெஸ்டில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.