விமானத்தில் பயணிக்க முடியாமல் தவிக்கும் “செருப்படி” எம்.பி.!

Must read

மும்பை,

விமான நிறுவன மேலாளரை செருப்பால் அடித்த சிவசேனை எம்.பிக்கு விமான நிறுவனங்கள் விமானத்தில் ஏற தடை விதித்துள்ளன.

இதன் காரணமாக அவர் வெவ்வேறு வழிகளில், விமான டிக்கெட் பெற முயன்று வரும் தகவல் வெளியாகியுள்ளது.

மஹாராஷ்டிராவைச் சேர்ந்த, சிவசேனா எம்.பி. ரவீந்திர கெய்க்வாட்,  ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்தபோது இருக்கை விஷயமாக தகராறு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து  அவரை சமாதானப்படுத்த வந்த விமான நிலைய மேலாளருக்கும் கெய்க்வாட்டுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதையடுத்து தனது செருப்பால் விமான நிலைய மேலாளரை அடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதையடுத்து அவருக்கு எந்தவொரு விமான நிறுவனத்திலும் பயணம் செய்ய டிக்கெட் வழங்கப்பட மாட்டாது என்றும் உள்நாட்டு விமானத்தில் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டது.

இதன் காரணமாக தொடர்ந்து டிக்கெட் பெற, வெவ்வேறு வழிகளில் முயன்று வருகிறார்.

கடந்த வாரம் மும்பையில் இருந்து, டில்லி செல்ல விமான டிக்கெட் பெற முயற்சி செய்துள்ளார். ஆனாலும் அவரது பெயரை கேட்டதும் விமான நிறுவன  ஊழியர்கள், ‘டிக்கெட் வழங்க முடியாது’ என தெரிவித்து விட்டனர்.

அதைத்தொடர்ந்து ஐதராபாத்தில் இருந்து டில்லி செல்ல பேராசிரியர் கெய்க்வாட் என்ற பெயரில் டிக்கெட் முன்பதிவு செய்ய முயற்சித்துள்ளார். அதையும்  ஏர் இந்தியா ஊழியர்கள் கண்டுபிடித்து டிக்கெட் கொடுப்பதை தவிர்த்து விட்டனர்.

பின்னர்  நாக்பூரில் இருந்து டில்லி செல்ல டிராவல்ஸ் ஏஜன்டுகள் மூலம் முன்பதிவு செய்துள்ளார்; அப்போதும், ‘ரவீந்திர கெய்க்வாட் என்ற பெயருக்கு டிக்கெட் கிடையாது என்று விமான நிறுவனங்கள் தெரிவிப்பதாக  ஏஜன்டுகள் தெரிவித்து உள்ளனர்.

கடந்த 7 நாட்களில் மட்டும் 6 முறை விமான டிக்கெட்டுக்கு முயற்சித்தும் அவருக்கு டிக்கெட் கிடைத்தபாடில்லை. இதன் காரணமாக செய்வதறியாது திகைத்து வருகிறார் கெய்க்வாட்.

More articles

Latest article