மும்பை: வரும் 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில், இரண்டு டி20 உலகப் போட்டிகள் வரவுள்ளது. நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சி என இந்திய அணியின் பக்கம் செய்தாக வேண்டியவைகள் நிறையவே உள்ளன. இதுகுறித்து, ரவி சாஸ்திரி டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பல விஷயங்கள் விளக்கப்பட்டுள்ளன.

கே: தென் ஆப்பிரிக்காவுடனான தொடரின் சிறப்பான வெற்றிக்குப் பின் அடுத்தத் திட்டம் என்ன?

அடுத்த இரண்டு வருடங்கள் கவனம் முழுவதும் டி-20 யிலேயே இருக்கும். டெஸ்ட் தொடர்கள் அது எப்போதும் இருந்து கொண்டேயிருக்கும். முக்கியமாக, புதிய சாம்பியன்ஷிப் சுழற்சியும் உண்டு. நமக்கு 2020 மற்றும் ’21 இல் தொடர்ச்சியான டி-20 போட்டிகள் இருக்கின்றன.

டி-20 போட்டிக்கான மகத்தான திறமை நம்மிடம் இருக்கிறது. கழித்து விடுதல் – மாற்றுதல் என்ற அணுகுமுறை இல்லாமல் திறமையைத் தட்டிக் கொடுத்து வீரர்களுக்கான தொடர்ந்த வாய்ப்புகளை உறுதி செய்வதே முதன்மையானதாகும். நாம் திறமையுள்ள இளையவர்களை மதிப்புமிக்க வாய்ப்புகளைப் பெற அனுமதிப்பதில்தான் உண்மையான உள்ளாற்றல் தங்கியுள்ளது.

ஒரு முறை, இளையவர் ஒருவர் அணிக்குக் கொண்டு வரப்பட்டால், இவ்வாறே தொடர்ந்திருப்பார். நிச்சயமாக புதிய தேர்வாளர்கள் இருப்பார்கள், அவர்களுடன் அமர்ந்து முன்னோக்கி செல்வதை உறுதிசெய்ய வேண்டும்.

கே: இந்தியா டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் முன்னணியில் உள்ளது. இச்சுழற்சியைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

தற்போது நாம் பெரிய அளவில் வெற்றியுடன் முன்னேறிக் கொண்டிருக்கிறோம். அதுவே, தொடர்ந்து நல்லதொரு அணியாக இருக்கிறோம் என்பதைப் பேசும். டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் தொடர் வெற்றிக்கான புள்ளிகள் இருந்திருந்தால் நான் மகிழ்ச்சியாக இருந்திருப்பேன். ஆனால் அப்படியில்லை.

உதாரணத்திற்கு, 120 புள்ளிகள் டெஸ்டுக்கு 60 மற்றும் தொடரை வென்றதற்கு 60 புள்ளிகளாகவும் பார்க்கிறோம் என்று சொன்னால் – அது சிறந்ததாக இருக்கும்.

கே: தோனியைப் பற்றி பலரும் பலவிதமாகக் கூறுகிறார்களே?

அவரைப் பற்றி விமர்சிப்பவர்களில், பாதி பேர் தங்கள் காலணியின் கயிறுகளைக் கூட முடிக்கத் தெரியாதவர்கள். அவர் நாட்டுக்காக எதை சாதித்திருக்கிறார் என்பதைப் பார்ப்போம். அவரை அனுப்பி வைப்பதில் மக்கள் ஏன் இவ்வளவு அவசரம் காட்டுகிறார்கள்? ஒருவேளை அவர்களுக்கு பேசுவதற்கு போதுமான விஷயங்கள் கிடைக்கவில்லை போலும்.

மேலும், அவருக்கும் அவரை அறிந்தவர்களுக்கும் அவர் விரைவில் விலகப் போவது தெரியும். அதனால், எப்போது நடக்கவேண்டுமோ அப்போது நடக்கட்டும். அவரை வைத்து அறிக்கைகள் விட்டுக்கொண்டிருப்பது அவமரியாதைக்குரியதாகும். 15 வருடங்கள் இந்தியாவுக்காக விளையாடி வந்த அவருக்குத் தெரியாதா என்ன செய்ய வேண்டுமென்று?

அவர் டெஸ்ட் போட்டிகளிலிருந்து விலகும் போது சொன்னது என்ன? விக்கெட் கீப்பருக்கான கையுறைகளை ஒப்படைக்கத் தகுதியானவராக ரித்திமான் சாஹாவைக் காட்டினார். அவர் சொன்னது சரியாகத்தான் இருந்தது. அணி என்று வரும்போது அவர், எப்போதும் தனது எண்ணங்கள் மற்றும் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டு அதன் நிழலாகத்தான் இருந்திருக்கிறார்.

அன்றொரு நாள் ராஞ்சியில், உடைமாற்று அறைக்கு வந்து ஷபாஸ் நதீமை சந்தித்துப் பேசினார். தமது முதல் போட்டியின்போது, ஒருவருக்கு அது எத்தகைய உற்சாகத்தைத் தந்திருக்கும்..! நான் இதை சொல்லியே ஆகவேண்டும்: எம்.எஸ்.தோனி கிரிக்கெட்டிலிருந்து விலகுவதை அவரே தேர்வு செய்யும் உரிமையை பெற்றுள்ளார். ஆகவே, இது சம்பந்தாமாக பேசுவது இதுவே இறுதி முறையாக இருக்கட்டும்.

கே: ஒருமுறை வாய்ப்பு பெற்ற வீரர்கள் தங்கள் இடத்தைத் தக்க வைத்துக்கொள்ள கால அவகாசம் தரப்படவேண்டிய நிலையில்……தொடர்ச்சியான நீக்கமும் மாற்றமும் அணிக்கு உதவுமா?

அணி நிர்வாகமானது, வீரர்கள் குழாம்களின் பாதுகாப்பை உறுதி செய்யும். நாங்கள் தேர்வாளர்களுக்கும் வீரர்களுக்குமிடையே தகவல் தொடர்பில் குறைபாடு இருந்தால், அணி நிர்வாகம் முன் வந்து எல்வோரும் சரியான புரிந்துணர்வில் இருப்பதை உறுதி செய்யும். உதாரணத்திற்கு, ரிஷப் பண்ட்டை எடுத்துக் கொண்டால், அவர் ஒரு நெருக்கடிக்குள்ளாகும் போது, தனது முழுமையானத் திறமையைக் காட்டும் நிலைக்குக் கொண்டு வருவது எனது பொறுப்பாகும்.

அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும்போது அவரை எழுந்து நின்று பாராட்டும் அதே வேளையில், எனக்கு மகிழ்ச்சியற்ற நேரத்தில் அவரைத் திட்டுவதற்கும் உரிமை உண்டு. இங்கு நான் குறிப்பிடுவது என்னவென்றால், வீரர்களின் கையில் போதிய அவகாசத்தினைத் தருவது மிக மிக முக்கியமானதாகும்.

வீரர்கள் கவனத்திற்குக் கொண்டு வராமல் தொடர்ச்சியான நீக்கமும் மாற்றமும், செய்வது சரியானதல்ல. விராத் கோலி, இதே தொலைநோக்கைத் தான் பகிர்ந்தார். இதே வரிகளைப் பகிர்ந்த முன்னோடி சவுரவ் கங்குலியை நாம் மறந்து விடக்கூடாது. அவர் அவரது அணித் தலைமைப் பொறுப்பின்போது, சிறப்பான கேப்டனாகத் திகழ்ந்தார்.

குறிப்பாக, அவரது அணியினர் சோபிக்காமல் இருந்தபோது, அவர்களின் திறமையின் மீது நம்பிக்கை வைத்து மீண்டும் பழையநிலைக்குக் கொண்டு வந்து அணியினை முன்னோக்கிக் கொண்டு சென்றார். இதுவே அணியின் நிர்வாகம் தேர்வுக் குழுவிடமிருந்து எடுத்துக் கொள்ளும் ஒன்றாகும்.

கே: டி20 உலகப் போட்டிக்கு ஒரு வருடத்திற்கும் குறைவான காலமே உள்ள நிலையில், திட்டமிடல் விரைவாக்கப்பட வேண்டுமே……

டி-20 க்கான தேர்வு முறை நற்பெயர்களின் அடிப்படையில் இருக்காது. நான் முன்பே கூறியது போல், அதை நாங்கள் வேறுபட்டுப் பார்க்கிறோம். ஒரு நாள் போட்டி அணியில் உள்ளவர்களில் 4 அல்லது 5 பேர் தான் டி20 ல் நிரந்தரமாக இருத்தப்படுவார்கள். அதனை சேர்ந்துருவாக்கும் பாதையில் முயற்சிகள் துவங்கி விட்டது. அதில் எந்தத் தவறுகளும் நடைபெறாது. டி20 புதிய கோணத்தில் வேலைக்கேற்ற-குதிரை என்ற கொள்கையின் அடிப்படையில் இருக்கும்.

கே: முன்பொரு நாள் ஆட்டக்களம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரானதாக எப்படி ஆனதெனக் கூறினீர்கள். இனி இந்தியாவில் எப்படிப்பட்ட நிலை இருக்கும்?

கடந்த முறை தென்னாப்பிரிக்க அணி இங்கு வந்தபோது, ஆட்டக்களத்தைப் பற்றி ஒரே அழுகையும் கூக்குரலுமாக இருந்தது, இப்போது என்னவாயிற்று? நாம் ஆட்டக்களத்தினை அதன் சமன்பாட்டிலிருந்து முற்றிலுமாக எடுத்து விட்டோம். இதைத்தான் அப்போதிலிருந்தே கூறிக்கொண்டிருக்கிறேன்.

20 விக்கெட்டுகளை சாய்ப்பதில் என்ன இருக்கிறது? அதற்கு டெஸ்ட் போட்டியை வென்றாக வேண்டும். ஆக்லேண்ட், மெல்பர்ன், ஜோஹன்னஸ்பர்க், கரீபியன் இங்கெல்லாம் ஆட்டக்களத்தை மையமாக்கி அதை ஒரு பேசுபொருளாய் ஆக்குவதில்லை. அதனால்தான் இந்த வாதத்தை நிறுத்திக் கொள்ள வேண்டுமென்கிறேன்.

மேற்பரப்புகளைப் பற்றி பேசி நம்மை சஞ்சலப்படுத்திக் கொள்ளாதிருப்போம். எந்த சூழ்நிலையிலும் அது முன்னை விட சிறப்பாய் தன்னை சீர்படுத்திக் கொள்ளும் ஓர் அணி நம்மிடம் உள்ளது.

கே: தனிநபரைப் பற்றி இல்லாமல், இந்த அணியைப் பற்றிய மிக அற்புதமான விஷயமாக இது தெரிகிறது……

கண்டிப்பாக. இந்த அணியானது, விராட் கோலியோ, ஜஸ்பிரிட் பும்ராவோ அல்லது ரோஹித் ஷர்மாவோ இல்லை. இது ஒட்டுமொத்த அணியாகும். அணியின் 12 அல்லது 15 வது வீரராக இருந்தாலும் சரி, களத்தில் இறங்கி ஆடுங்கள். இதுவே எங்கள் நோக்கம்.

உமேஷும் ஷமியும் நல்ல திறமையான ஆட்டக்காரர்களாக இருக்கும்போது, ஷபாஸ் போன்றவர்களும் உள்ளே வருகிறார்கள். அவர்களும் டெஸ்ட் தொடரை தமதாக்குகிறார்கள். அவர் 400க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்து விட்டார். இது அவர் இதுவரையில் போட்ட உழைப்பினைப் பேசுகிறது.

ஒட்டுமொத்த அணியும் அவர் மண்ணின் மக்கள் முன்னால் ஆட்டத்தை முடித்து வைக்கும் போது மகிழ்ச்சியை அடைகிறது. அவரிடம் நேர்த்தியான சுழல் பந்து வீச்சு இருந்தது.

கே: ரோஹித் டெஸ்ட் போட்டிகளில் துவக்க ஆட்டக்காரராக இருப்பதில் சௌகரியம் கொள்வது போல் தெரிகிறதே……

இந்தத் தொடரில் ரோஹித் செய்தது மகத்தானது. அவர் முழுக்கட்டுப்பாட்டுடன் இருந்தார். ரோஹித் போல ஒருவர் இதுபோன்ற நிலைப்பாட்டில், தன்னம்பிக்கையுடன் காணப்படும்போது நான் இதை மட்டும் தான் சொல்ல முடியும்: ‘எந்த எதிர்ப்பும் ஒரு எச்சரிக்கையாக இருக்கும்‘, என்று.

அவர் ஒரு காலத்தில் வீரேந்திர சேவாக் கொண்டிருந்த இடத்திற்கான உள்ளார்ந்த திறமையைக் கொண்டுள்ளார். அவர் துவக்க ஆட்டக்காரராக களமிறங்குவதற்காக முடிவு செய்யும் தேர்வை அவரே பெற்றிருந்தார். அது பல ஆண்டுகளுக்கு முன்னரே நாங்கள் பேசியதாகும். தற்போது அவ்வாறு களமிறங்க அவரே முடிவு செய்துள்ளார்.

அவரின் 100ஐ, 200ஆக ஆக்கும் திறமை நாம் அனைவரும் அறிந்ததே. அவர் வெறித்தனமாக ஓட்டங்களை உயர்த்தும் விராத்தின் பாதையில் நடந்தால் அணிக்கு வேறென்ன வேண்டும்? என்றார் ரவி சாஸ்திரி.

மேலும் அவரிடம், சவுரவ் கங்குலி பிசிசிஐ அமைப்பின் தலைவரானதைப் பற்றிக் கேட்டதற்கு, அவருக்கு வாழ்த்துத் தெரிவிப்பதாகவும், ஏற்கெனவே அவர் நிர்வாகத்தில் பணியாற்றியிருப்பதாகவும், நிறைய செய்ய வேண்டிய நேரத்தில் அவர் பொறுப்பேற்றுள்ளது நல்ல விஷயமென்றும் கூறினார்.

அத்துடன் உலக கிரிக்கெட்டுக்கு இந்தியா நிறைய வழங்க வேண்டியுள்ளதாயும் தேசிய கிரிக்கெட் பயிற்சியகத்தின் மூலம் இன்னும் பல நன்மைகள் நடக்க சவுரவ் பிசிசிஐ ன் தலைவராக இருப்பதும் தேசிய கிரிக்கெட் வாரியத்தில் டிராவிட் இருப்பதும் சாதகமாக உள்ளதாகவும் தெரிவித்தார்.