சென்னை: தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு இணையதளத்தில், வேலைவாய்ப்புக்காக பதிவு செய்வதையோ, ரினிவல் செய்வதையோ தவற விட்டர்களுக்கு அரிய வாய்ப்பை தமிழகஅரசு வழங்கியுள்ளது. அதன்படி, தமிழகத்தில் வேலைவாய்ப்புக்கான பதிவினை புதுப்பிக்க கூடுலாக 3 மாதம் கால அவகாசம் வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை 2014, 2015, மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்புக்கான பதிவினை புதுப்பிக்க தவறிய பதிவுதாரர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை மற்றும் 2017, 2018, மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்புக்கான பதிவினை புதுப்பிக்க ஏற்கெனவே வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவடைந்த நிலையில் மேலும் மூன்று மாதங்களுக்கு சிறப்பு புதுப்பித்தலுக்கான சலுகை வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக,தமிழக அரசின் அரசாணையில், ” 2021-2022 ஆம் ஆண்டுக்கான தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் மானியக்கோரிக்கையின் மீதான விவாதத்திற்கு பின்னர். மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் அவர்கள் 04.09.2021 அன்று சட்டமன்றப் பேரவையில் பின்வரும் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து, தங்கள் பதிவினை 2014. 2015 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் புதுப்பிக்கத் தவறிய சுமார் 48 லட்சம் பதிவுதாரர்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கப்படும். 2017, 2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் தங்களது வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினை புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்களுக்கு, ஏற்கெனவே 3 மாத கால அவகாசம் வழங்கப்பட்டது. இக்கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை ஏற்று புதுப்பித்தல் சலுகை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்து வழங்கப்படும், என்று கூறியிருந்தார்.
இதனையடுத்து,வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையங்களில் பதிவு செய்துள்ள பதிவுதாரர்கள் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை தங்களது பதிவினை புதுப்பிக்க வேண்டும் எனவும், 2014, 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்புக்கான பதிவினை புதுப்பிக்க தவறிய பதிவுதாரர்களுக்கு ஏற்கெனவே புதுப்பித்தல் சலுகை வழங்கப்பட்டும் பதிவினை புதுப்பிக்காமல் அதிக அளவில் உள்ள பதிவுதாரர்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்குமாறும், 2017, 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்புக்கான பதிவினை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கப்பட்டு, அவ்வரசாணை வெளியிடப்பட்ட நாளிலிருந்து 3 மாதங்களுக்கு வழங்கப்பட்ட சலுகை 27.08.2021 உடன் முடிவடைந்த நிலையில். இச்சலுகையை புதுப்பிக்கத பதிவுதாரர்கள் தங்களின் பதிவு மூப்பினை மீளப் பெறும் பொருட்டு,மேலும் மூன்று மாதங்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கி ஆணையிடுமாறு அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த கருத்துருவினை அரசு கவனமுடன் ஆய்வு செய்து, தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையங்களில் 2014, 2015, மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்புக்கான பதிவினை புதுப்பிக்க தவறிய பதிவுதாரர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை மற்றும் 2017, 2018, மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்புக்கான பதிவினை புதுப்பிக்க ஏற்கெனவே வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவடைந்துள்ள நிலையில் மேலும் 3 மாதங்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கி பின்வருமாறு அரசு ஆணையிடுகிறது:
இச்சலுகையைப் பெற விரும்பும் வேலைநாடுநர்கள்,அரசாணை வெளியிடப்படும் நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் விடுபட்ட பதிவினை புதுப்பித்துக் கொள்ளலாம்.
இச்சலுகை ஒரு முறை மட்டும் வழங்கப்படும்.
மூன்று மாதங்களுக்குப் பின் பெறப்படும் கோரிக்கைகள் நிராகரிக்கப்படும். 01.01.2014-க்கு முன் புதுப்பிக்கத் தவறியவர்களின் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
இவ்வாணை பற்றிய விவரங்களை இரண்டு முன்னிலை தமிழ் நாளிதழ்களில் வெளியிடுவதுடன், அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையங்களில் உள்ள தகவல் பலகையில் (Notice Board in all District Employment and Career Guidance Centres) பொது மக்களின் தகவலுக்காக காட்சிப்படுத்த வேண்டும் என அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய அலுவலர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்குமாறு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் அறிவுறுத்தப்படுகிறார்”.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.