சென்னை: பல்லவன் இல்லம் முன்பு போக்குவரத்து தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்  நடத்தி வருகின்றனர்.  அப்போது திமுக  அரசுக்கு எதிராக போக்குவரத்து ஊழியர்கள் கண்டன கோஷம் எழுப்பினர். இதனால், அங்கு  பரபரப்பு நிலவி வருகிறது. நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

6அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  திமுக கூட்டணி கட்சியான கம்யூனிஸ்டு மற்றும் அண்ணா தொழிற்சங்கத்தினர் ஜனவரி 9ந்தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. நேற்று தொடங்கிய இந்த போராட்டத்தில் எவ்வித முடிவுகளும் எட்டப்படாததாலும் தற்காலிக ஓட்டுநர்களை நியமித்து பேருந்துகளை இயக்கியதாலும், இன்று 2வது நாளாக போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். 6 அம்ச கோரிக்கைகளில் பொங்கலுக்கு முன்பாக முதற்கட்டமாக அகவிலைப்படி 4 மாத தொகையை வழங்க கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும், மாநிலம் முழுவதும்  பல்வேறு பேருந்து நிலையங்கள் மற்றும் பல்லவன் இல்லம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என சிஐடியு மாநிலத்தலைவர் அ.சவுந்தரராசன் தெரிவித்திருந்தார்.  அதன்படி, இன்று தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பணிமனைகளில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அண்ணா தொழிற்சங்கம், சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினர் இரண்டாவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று சென்னை உள்பட மாநிலம் முழுவதும்  2-வது நாளாக போக்குவரத்து பணிமனைகளை முற்றுகையிட்டு போராட்டம்  நடத்தி வருகின்றனர். சென்னை பல்லவன் சாலையில்  உள்ள  பல்லவன் இல்லம் பணிமனையை முற்றுகையிட்டு விளம்பர அரசுக்கு எதிராக போக்குவரத்து ஊழியர்கள் கண்டன கோஷம் எழுப்பி வருகின்றனர்.  அண்ணா தொழிற்சங்க பேரவை சேர்ந்த போக்குவரத்து ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை முழக்கங்களாக எழுப்பி வருகிறார்கள். கொடிகளை ஏந்தியவாறு நூற்றுக்கும் மேற்பட்டோர் கூடி போராடி வருகின்றனர்.  பல்லவன் சாலையில் மத்திய பணிமனை முன்பு சாலையின் ஒரு புறத்திலிருந்து மறுபுறத்திற்கு வருவதற்கு வழியின்றி காவல் துறையினர் தடுப்புகள் வைத்திருக்கின்றனர். இதனால் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எனவே அந்த பகுதியில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.

தொழிலாளர்களின் போராட்டத்தால்  சென்னை பல்லவன் இல்லத்தை சுற்றி காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறை இணை ஆணையர் தர்மராஜன் மேற்பார்வையில் துணை ஆணையர் தேஷ்முக் சேகர் சஞ்சய் தலைமையில் பல்லவன் இல்லத்தில் 300 க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.