ரவுண்ட்ஸ்பாய் கேள்விகளும்.. ராமண்ணா பதில்களும்..
ரவுண்ட்ஸ்பாய்: அனிதா தற்கொலை செய்துகொண்டதற்குக் காரணம், தகுதியின்மையா?
ராமண்ணா: தகுதியின்மை என்றால், ப்ளஸ்டுவில் அத்தனை மதிப்பெண் எடுத்திருப்பாரா.. அதுவும் தாய் இல்லாத சூழல், மிக வறுமை.. இதையெல்லாம் தாக்குப்பிடித்து நல்ல மதிப்பெண் பெற்றிருக்கிறார்.
மத்தய மாநில அரசுகள்… அதாவது இதன் சார்பிலான அமைச்சர்கள்… நீட் விலக்கு பற்றி உறுதி அளித்ததும் அதை நம்பியிருக்கிறாள் அந்த சிறுமி. ஆனால் அமைச்சர்கள் பேசியது வெற்று அரசியல் என்பது அவளுக்குப் புரியவில்லை. ஏமாற்றம்.. விரக்தி.. இதனால் தற்கொலை செய்துகொண்டாள் அனிதா.
தற்கொலை ஏற்றுக்கொள்ள முடியாத விசயம். அவளை தற்கொலைக்குத் தூண்டியவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கப்போகிறோம்?
ரவுண்ட்ஸ்பாய்: சாகடிக்கும் என்று தெரிந்தே ப்ளூ வேல் விளையாட்டை விளையாடுவது எத்தனை முட்டாள்த்தனம்
ராமண்ணா: ரொம்ப டென்சன் ஆகாதீங்க… நாமெல்லாம் ஓட்டுப்போடுறதில்லையா அதுமாதிரித்தான் இதுவும்.
ரவுண்ட்ஸ்பாய்: “நீட் தேர்வில் மதிப்பெண் எடுக்காமல் மருத்துவக்கல்லூரியில் சேர முடியாததால் அனிதா தற்கொலை செய்துகொண்டதற்கு ஆதங்கப்படுகிறார்களே.. எங்களது பிராமன இளைஞர்கள் நல்ல மதிப்பெண்கள் எடுத்தும் இட ஒதுக்கீடு காரணமாக கல்வி மறுக்கப்படுகிறதே.. யாராவது தற்கொலை செய்துகொள்கிறார்களா” என்று சிலர் சமூகவலைதளங்களில் கருத்திட்டு வருகிறார்களே..
ராமண்ணா: சிலர்.. அல்ல.. பலர் அப்படி பதிவிட்டு வருகிறார்கள். அவர்களில் பிராமணர்களோடு இதர சில முற்பட்ட வகுப்பினரும் உள்ளனர்.
அப்படி எழுதுவோர் அறியாமையில் இருக்கிறார்கள் என்று கருதி நாம்தான் விளக்கம் அளிக்க வேண்டும். இட ஒதுக்கீட்டால் அவர்களுக்கு ஏற்பட்ட “பாதிப்பும்”, நீட் தேர்வால் ஒடுக்கப்டோருக்கு ஏற்பட்ட பாதிப்பும் வேறு வேறானவை.
பிராமணர்கள், காலம் காலமாக அதாவது பற்பல நூறாண்டுகளாக சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு பெற்று கல்வி, செல்வம் என குவித்து வந்தனர்.
அதாது, “பிராமணர்கள்தான் கல்வி கற்க வேண்டும். மற்றவர்கள் படித்தால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்று” என்று “ வேதங்கள்” கூறின. அதாவது அப்படி எழுதி வைத்தனர்.
அதே போல சாதிக்கேற்ற “உரிமைகளே” பன்னெடுங்காலம் நிலவின. இதில் உச்சபட்ச சுகங்களை, சலுகைகளை அனுபவித்தவர்கள் பிராமணர்களே.
மற்ற ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, மறுக்கப்பட்டது. அவ்வளவு ஏன், குடிதண்ணீர் எடுக்கக்கூட மறுப்பும், சாலையில் நடக்க தடையும் இருந்தது நமது ஈன வரலாறுதானே!
இப்படி ஒடுக்கப்பட்ட மக்கள் வாழவே வழியற்ற நிலையில் இருந்தபோது, படிப்பதில் எங்கே கவனம் செலுத்த முடியும்?
தந்தை பெரியார் உட்பட பல தலைவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப்போராடி பல உரிமைகளை பெற்றுத்தந்தனர்.
இதுவரை முறைகேடான முறையில் இட ஒதுக்கீடு பெற்று முன்னேறிவிட்ட பிராமணர் உள்ளிட்டோருடன் ஒடுக்கப்பட்ட மக்கள் சரிக்கு சரி போட்டிபோட்டு வெற்றி பெற முடியாது என்பதால்தான் இட ஒதுக்கீடு என்ற உரிமை அளிக்கப்பட்டது. அதாவது பிராமணர்உள்ளிட்டவர் முறைகேடாக பெற்ற “இட ஒதுக்கீடு” என்பது “முறையற்ற சலுகை”. ஆனால், அந்த முறைகேட்டைக் களைய கொண்டுவரப்பட்ட இட ஒதுக்கீடு என்பது, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை.
இதுதான் பிராமணர்களுக்கு அளிக்கப்பட்ட இட ஒதுக்கீட்டுக்கும், ஒடுக்கப்பட்டோருக்கு அளிக்கப்பட்ட இட ஒதுக்கீட்டுக்குமான வித்தியாசம்.
ஆனால்.. பல நூற்றாண்டுகள் முறைகேடாக ஒதுக்கீடு பெற்றுவந்த பிராமணர்களுக்கும் அவர்களது சமீபத்திய பங்காளிகளுக்கும்… ஒரு நூற்றாண்டு கூட ஆகியிருக்காத, ஒடுக்கப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை ஏற்க மனமில்லை.
“அதென்ன பிறப்பின் அடிப்படையில் ஒதுக்கீடு…. தகுதிதானே முக்கியம்” என்கின்றனர்.
ஆம்.. காலம்காலமாக பிறப்பின் அடிப்டையில் மட்டுமே சலுகைகளை அனுபவித்து வந்தவர்கள்தான் இதைச் சொல்கிறார்கள். பழைய பஞ்சாங்கமே.. அநீதியே தொடர வேண்டும் என்பதே இவர்களது முறைகேடான ஆசை.
ஆனால், சமூக ஆர்வலர்களின் கருத்து வேறு:
“பிறப்பின் அடிப்படையில் காலம் காலமாக சலுகை பெற்றவர்களையும், வாழவே வழியற்றவர்களையும் ஒரே தராசில் வைத்து கணிக்க முடியுமா” என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்து.
இப்போது நீட் இதைத்தான் செய்கிறது.
வட கிழக்கு இந்தியாவில் எந்தவித அடிப்படை வசதியும் இல்லாத மாணவனையும், டில்லியில் அனைத்து வசதிகளையும் பெற்ற மாணவனையும் ஒரே தராசில் நிறுக்கிறது. இருவருக்கும் ஒரே மாதிரி தேர்வு என்கிறது.
இது தவறல்லவா?
ஆகவே இட ஒதுக்கீடு ஒழிப்பு என்பதை ஆதிகார வர்க்கம் தற்போது “நீட்” மூலம் கொண்டுவருகிறது.
ஆகவேதான் இட ஒதுக்கீட்டை ஆதிரிக்கும் சமூக ஆர்வலர்கள் நீட் தேர்வை எதிர்க்கிறார்கள். இது சரியான பார்வையே.
அதே நேரம் இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் பிராமணர்கள் உள்ளிட்ட சில முற்பட்ட வகுப்பினர், நீட் தேர்வை ஆதரிப்பதும் அவர்களுக்கு சாதகமே.
ஆனால் ஒடுக்கப்பட்ட மக்களில் பலரே இதை உணராமல் இட ஒதுக்கீட்டுக்கு எதிராகவும், நீட்டுக்கு ஆதரவாகவும் பேசு வருவது சோகம். இவவர்கள் தங்கள் தந்தையை (வரலாற்றை) அறியாதவர்கள். நாம்தான் அவர்களுக்கு சொல்லித்தர வேண்டும்.