சுவாதி கொலை வழக்கில் ஒரே வாரத்தில் ராம்குமாரை கைது செய்திருக்கிறது காவல்துறை. இது பாராட்ட வேண்டிய விசயம்தான். அதே நேரம், கொலைக்கான காரணமாக காவல்துறை சொல்வது குறித்து பல கேள்விகள் எழுகின்றன.
காவல்துறை, “சுவாதியை ராம்குமார் ஒருதலையாக காதலித்திருக்கிறான். அதற்கு சுவாதி ஒத்துக்கொள்ளவில்லை என்பதால் கொன்றுவிட்டான்” என்கிறது.
இங்குதான் பலவித சந்தேகங்கள் எழுகின்றன.
ராம்குமார் சென்னைக்கு வந்து சுமார் மூன்று மாதங்கள்தான் ஆகின்றன என்கிறது காவல்துறை. மூன்றுமாத காலத்தில் அவனுக்கு சுவாதி அறிமுகமாகி, அந்த பெண் மீது காதல் கொண்டு, கொலை செய்யும் அளவுக்கு போவானா என்பது முக்கியமான கேள்வி.
ஏற்கெனவே பரனூரில் சுவாதி பணியாற்றியபோது சென்னை நொளம்பூரைச் சேர்ந்த வாலிபர் சுவாதியிடம் இரவு நேரங்களில் நீண்ட நேரம் அலைபேசியிருப்பதாக தகவல் வெளியானது. அந்த இளைஞரிடம் தொடர்ந்து விசாரணை நடப்பதாகவும் சொல்லப்படுகிறது. அது குறித்த விவரம் என்ன?
சுவாதியின் இன்னொரு ஆண் நண்ரான, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த இளைஞரிடமும் விசாரணை தொடர்கிறது. தவிர முன்பு சுவாதி பெங்களூருவில் பணியாற்றிதால் அங்கும் காவல் துறையின் ஒரு டீம் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையே,  சுவாதியின் ஆண் நண்பர் ஒருவர் அவ்வப்போது சுவாதியின் வீட்டுக்கே தனது இருசக்கர வாகனத்தில் கொண்டுவந்து விடுவார் என்று விசாரணையில் தெரியவந்ததாக சொல்லப்பட்டது. இவை எல்லாம் ஊடகங்களிலும் வெளியான செய்திகள்தான். இந்த நிலையில் இவர்களிடம் முழு விசாரணைய முடிக்காமல், ராம்குமார் மீது மட்டுமே பழியைப்போட காரணம் என்ன?
1
கொலை நடப்பதற்கு பல நாட்கள் முன்பாகவே, சுவாதியை ஒரு வாலிபர் பின்தொடர்ந்ததாக சொல்லப்பட்டது. அது, தற்போது பிடிபட்ட வாலிபர்தானா. அல்லது வேறுயாருமா?  இது குறித்து சுவாதி ஏன் தனது நெருங்கிய தோழி, தோழர்களிடம் கூட சொல்லவில்லை?
காதல் கொலை என்றால், சுவாதியின் செல்போனை கொலயாளி எடுத்துச் சென்றது ஏன்? அதில் இருந்த தகவல்கள் என்ன?
”சுவாதியின் ஆண் நண்பர்களில் ஒருவர் சுவாதியை காதலித்திருக்கலாம். அதை சுவாதி மறுத்திருக்கலாம். இதனால் ஆத்திரமான அந்த நபர், ராம்குமாரை ஏவி கொன்றிருக்கலாம்” என்ற கோணத்தை மறுக்க முடியுமா?
இன்று சென்னை காவல்துறை ஆணையர் ராஜேந்திரன் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில், “கொலையாளி யாரென்று காவல்துறை கண்டுபிடிக்கும் முன்பே, தவறான – பொய்யான தகவல்களை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா” என்ற கேள்வியை அவர் கடந்துசென்றுவிட்டார். காவல்துறை ஏதோ நிர்பந்தத்தில் இருக்கிறதா?
கழுத்து அறுபட்ட நிலையில், “சுவாதியை நான் காதலித்தேன்.  அந்த பெண் ஒத்துக்கொள்ளாததால் கொன்றேன்”என்று ராம்குமார் வாக்குமூலம் அளித்ததாக போலீஸ் கூறுகிறது. ஆனால் ராம்குமார் அனுமதிக்கப்பட்டிருக்கும் நெல்லை அரசு மருத்துவமனையில் முதல்வர் சித்தி அததிய முனவரா, “ராம்குமாார் இரண்டு நாட்களுக்கு பிறகே பேச முடியும்” என்று கூறுகிறார். எது உண்மை?
ராம்குமாரோடு இந்த வழக்கை முடிக்க காவல்துறை நினைப்பது போலவே தோன்றுகிறது. அதற்கு காரணம் இருக்கலாம். காவல்துறயின் விசாரணையை ஏனோ எதிர்கொள்ள முடியாமல், சுவாதியின் தாயார் “காவல்துறையினர் டார்ச்சர் செய்கிறார்கள்” என்று முதல்வர் தனிப்பிரிவில் புகார் கொடுத்ததாகவும் செய்தி வெளியானது. அதோடு பல்வேறு அரசியல் கட்சித் தலவர்கள், பிராமணர் சங்கங்கள் சுவாதி குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் சொல்லி ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். சமூகவலைதளங்களில் இந்த விவாகாரமே தொடர்ந்து பலராலும் பேசப்படுகிறது.
ஆகவே, சுவாதியின் ஆண் நண்பர்களில் ஒருவருக்காக,  ராம்குமார் கூலிப்படையாக செயல்பட்டிருக்கலாமோ என்கிற கோணத்தை ஆராய காவல்துறை மறுக்கிறதா?
குற்றம் செய்தவனைவிட தூண்டியவனுக்கே அதிக பொறுப்பு என்பார்கள். அப்படி “அதிக பொறுப்புள்ள” யாரோ ஒரு நபரைத் தேடும் முயற்சி தடை படுகிறதா?
ஒரு பெண், பிறருடன் இயல்பாக பழகுவது தவறல்ல. அது அவரது உரிமை. ஆனால், “சுவாதி யாரிடமும் பேசவே மாட்டார்” என்பது போன்ற தேவையற்ற “புனித பிம்பத்தை” கட்டமைக்க விரும்பி, ராம்குமாரோடு இந்த வழக்கை மூட காவல்துறை விரும்புகிறதா?
ராம்குமார் பிளேடால் தனது கழுத்தை அறுத்துக்கொண்டதாக கூறியது காவல்துறை. ஆனால், கத்தி போன்ற கூரிய பொருளால் தனது கழுத்தை ராம்குமார் அறுத்துக்கொள்வது போன்ற புகைப்படம் சமூகவலைதங்களில் உலவுகிறது. யாரோ வெட்டிக்கொள்ளச்சொல்லி உத்தரவிட்டு படம் எடுத்தது போல இருக்கிறதே?
சுருக்கமாகச் சொன்னால், ராம்குமார் ஒருதலைக் காதலனா, கூலிப்படையாக செயல்பட்டவனா..
ஆரம்பத்தில் காவல்துறை வெளியிட்ட சி.சி. டிவி படம் போல தெளிவில்லாமலே இருக்கிறது!