சென்னை: சுதந்திர போராட்ட வீரர் இராமசாமி படையாட்சியார் 108ஆவது பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

சுதந்திர போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சருமான இராமசாமி படையாட்சியாரின் 108ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதை யொட்டி அவரது உருவச்சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சென்னை கிண்டி, ஹால்டா சந்திப்பில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரது சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவ படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை ச்யதார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள், மேயர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் இராம சுகந்தன், உள்பட பலர் கலந்து கொண்டு அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்திய நாட்டின் விடுதலைக்குப் போராடிய வீரரும், முன்னாள் அமைச்சரும், உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காக முன்னின்ற சமூகநீதித் தலைவருமான திரு. ராமசாமி படையாட்சியார் அவர்களின் பிறந்தநாளில் அவரது பங்களிப்புகளைப் போற்றி வணக்கம் செலுத்தினேன்! என குறிப்பிட்டுள்ளார்.
எஸ்.எஸ். இராமசாமி படையாட்சியார் தென் ஆற்காடு மாவட்டம், கடலூரில் 1918ம் ஆண்டு செப்டம்பர் 16ம் நாள் சிவசிதம்பரம் படையாட்சி ரெத்தினம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். இவர் நகராட்சியில் தமது 60 ஆண்டுகள் பொதுவாழ்வில் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினர். இரண்டு முறை மேலவை உறுப்பினர். இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினர், தமிழ்நாடு அரசின் அமைச்சர் எனப் பல்வேறு பொறுப்புகளிலும் பணியாற்றினார்.
இராமசாமி படையாட்சியார் அவர்கள் நினைவைப் போற்றும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் சென்னை மாநகரின் நுழைவாயிலான கிண்டியில் இராமசாமி படையாட்சியார் அவர்களின் கம்பீரச் சிலையை நிறுவி 21.2.2001 அன்று திறந்து வைத்தார்கள். மேலும், அவரது பிறந்த நாளான செப்டம்பர் 16 அன்று தமிழ்நாடு அரசின் சார்பில் அரசு விழாவாகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
[youtube-feed feed=1]