சோம்நாத்

புதிய இந்தியாவின் வலுவான தூண் ராமர் கோவில் ஆகும் என பிரதமர் மோடி கூறி உள்ளார்.

குஜராத்தில் உள்ள சோம்னாத் பகுதியில் பார்வதி கோவிலுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று நடந்தது.  பிரதமர் மோடி காணொளிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டி பல திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.  இந்நிகழ்வில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சுற்றுலா அமைச்சர் கிஷன் ரெட்டி, குஜராத் முதல்வர் விஜய் ரூபானி துணை முதல்வர் நிதின் படேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பிரதமர் மோடி தனது உரையில் “மத சுற்றுலாக்களை நாம் வலுப்படுத்த வேண்டும். இதன் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பையும் வழங்க முடியும். அவர்கள் நமது கடந்த காலத்தைப் பற்றிய அறிவைப் பெறுவார்கள். நிறைய விஷயங்களை நாம் கடந்த காலத்திலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.

இந்தியாவின் ஒருங்கிணைப்பு இயக்கம் (Bharat jodo andolan) பற்றிப் பேசும்போது, அது வெறும் புவியியல் மற்றும் கருத்தியல் தொடர்பு பற்றியது அல்ல. ஆனால் நமது வரலாற்றின் பாரம்பரியத்துடன் ஒரு புதிய இந்தியாவை உருவாக்குவதற்கான உறுதிமொழி எனத் தெரிவித்துள்ளேன். அயோத்தி ராமர் கோவில் நமது புதிய இந்தியாவின் வலுவான தூணாக உருவாக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.