அமரர் ராஜிவ் காந்தியின் 77 வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

1944 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20 ம் தேதி பிறந்த இவர், இவரது இளைய சகோதரரும் இந்திய பிரதமராக இருந்த இந்திரா காந்தியின் இரண்டாவது மகனுமான சஞ்சய் காந்தி 1980 ல் திடீரென மரணமடைந்ததைத் தொடர்ந்து அரசியலில் தனது தாயாருக்கு தோல் கொடுக்க களமிறங்கினார்.

விமானியாக பணி புரிந்து வந்த ராஜிவ் காந்தி அரசியலில் ஈடுபட விருப்பம் இல்லாமலே இருந்துவந்தார், தனது தாயாரின் வேண்டுகோளையும் ஏற்க மறுத்த இவரை அரசியலில் ஈடுபடும்படி பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர்.

இந்திரா காந்தியின் தோழியும், ஓஷோ-வின் தனிச் செயலாளராக இருந்தவருமான லக்ஷ்மிக்கு ராஜிவ் காந்தியை அரசியலில் இழுத்துவந்ததற்கு பெரும்பங்கு இருந்ததாக, ரஷீத் மாக்ஸ்வல் எழுதிய ‘தி ஒன்லி லைப்’ என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இப்படி பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று தனது பணியை ராஜினாமா செய்த ராஜிவ் காந்தி 1981 ம் ஆண்டு அமேதி நாடாளுமன்ற தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் லோக்தள் கட்சி சார்பாகப் போட்டியிட்ட சரத் யாதவை தோற்கடித்து முதல் முறையாக எம்.பி. ஆனார்.

1982 ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டி ஏற்பாட்டுக் குழு உறுப்பினராக இருந்த ராஜிவ் காந்தி, போட்டியில் பங்கேற்ற இந்தியா உள்ளிட்ட 33 நாடுகளும் வியக்கும் வண்ணம் போட்டிக்கான ஏற்பாடுகளைச் சிறப்பாக செய்து கொடுத்தார்.

ஆசிய போட்டிகளை தொலைக்காட்சியில் வண்ணத்தில் ஒளிபரப்ப நடவடிக்கை மேற்கொண்டு, நாட்டில் வண்ணத் தொலைக்காட்சிகளின் அறிமுகத்திற்கு வழிவகுத்தவர் ராஜிவ் காந்தி என்றால் அது மிகையாகாது.

1984 ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 ம் தேதி பிரதமராக இருந்த இந்திரா காந்தி சுட்டுகொல்லப் பட்டதை அடுத்து பிரதமராக பொறுப்பேற்ற ராஜிவ் காந்திக்கு வயது அப்போது 40. அதே ஆண்டு இறுதியில் நடந்த பொதுத் தேர்தலிலும் வெற்றி பெற்றார்.

இளம் வயதில் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் அரசியல் தலைவராகப் பதவி வகுத்த ராஜிவ் காந்தி, பஞ்சாயத் ராஜ் சட்டம் மூலம் கோடிக்கணக்கான இந்தியர்களை ஜனநாயகக் காற்றை சுவாசிக்கச் செய்தார்.

தொலைத்தொடர்புத் துறையில் புரட்சி செய்த ராஜிவ் காந்தி இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு வித்திட்டதோடு, நாட்டின் இளைய சமுதாயத்திற்கு நல்விடியலை ஏற்படுத்தினார்.

1991ம் ஆண்டு கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட ராஜிவ் காந்தி, 1981 முதல் 1991 வரை பத்தாண்டுகள் மட்டுமே அரசியலில் ஈடுபட்டார், எனினும் 1984 முதல் 1989 வரை ஐந்தாண்டுகள் அவர் பிரதமராக இருந்த காலத்தில் மேற்கொண்ட, மக்களை சிரமத்திற்குள்ளாக்காத, பல புரட்சிகர நடவடிக்கைகள் இன்றளவும் அவரின் புகழை உலகிற்கு உரக்கச் சொல்வதாகவே உள்ளது.