டில்லி

டந்து முடிந்த நாடாளுமன்றத் தொடரில் நிறைவேற்றப்பட்ட ஓபிசி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

ஓபிசி எனப்படும் இதர பின் தங்கிய வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்னும் கோரிக்கை வெகு நாட்களாக அனைத்துக் கட்சிகளும் எழுப்பி வருகின்றன.  இது குறித்து சட்டத் திருத்தம் அமைக்குமாறு மத்திய அரசுக்கு உச்சந்நிதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.   இதையொட்டி நாடாளுமன்றத்தில் இதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

இந்த 127 ஆம், சட்ட திருத்த மசோதாவில் இட ஒதுக்கீட்டுக்குத் தகுதியான இதர பின் தங்கிய வகுப்பினரை மாநில அரசுகளே அடையாளம் கண்டு அறிவிக்கலாம் என ஒரு பிரிவு அமைக்கப்பட்டிருந்தது.   நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்காலத் தொடரில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

ஏற்கனவே இந்த மசோதா மத்திய அமைச்சரவையால் ஏற்றுக்  கொள்ளப்பட்ட நிலையில் இதை சட்டமாக்கக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.  எனவே குடியரசுத் தலைவர் ஒப்புதலின் அடிப்படையில் அரசிதழில் 127 ஆம் சட்டத் திருத்தம் வெளியிடப்பட்டுள்ளது.