டில்லி

கொரோனா பூஸ்டர் தடுப்பூசி போட வேண்டியது அவசியம் இல்லை என உலக சுகாதார நிறுவன விஞ்ஞானி சவுமியா சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

நாட்டில் விரைவில் கொரோனா மூன்றாம் அலை பரவல் நிகழலாம் என அச்சுறுத்தல் உள்ளது.  இதையொட்டி நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.  தற்போது இரு டோஸ் தடுப்பூசிகள் போட்டுக் கொண்டோருக்கு ஒரு சில நாடுகளில் பூஸ்டர் தடுப்பூசி போடப்படுவது குறித்து ஆய்வு நடந்து வருகிறது.

இந்தியாவில் இதுவரை அனைவருக்கும் இரு டோஸ்கள் தடுப்பூசி முழுமையாகப் போடப்படவில்லை.  எனவே தடுப்பூசி தேசிய தொழில்நுட்ப தலைவர் என் அரோரா, “மக்களுக்கு 2 டோஸ் போடத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  அது முழுமையாக முடியும் வரை பூஸ்டர் தடுப்பூசி போடுவது குறித்து கருத்தில் கொள்ளப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சாமிநாதன் இது குறித்து, ‘தற்போதைய தரவுகளின்படி, பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட வேண்டிய அவசியமில்லை. முதலில் ஏழை நாடுகளின் மக்களுக்கு முழுமையாகத் தடுப்பூசி போடக் கவனம் செலுத்த வேண்டும். அதன் பிறகு பணக்கார நாடுகள் பூஸ்டர் டோஸ் போடுதல் குறித்து முடிவு செய்ய வேண்டும். இன்னும் பூஸ்டர் தடுப்பூசி குறித்து ஆராய்ச்சிகள் தொடர்கின்றன’ என கூறி உள்ளார்.

ஏற்கனவே அமெரிக்காவில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடுவதற்கு அந்நாட்டின் எப்.டி.ஏ. என்னும் உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. அந்நாட்டில் பைசர்- பயோ என்டெக், மற்றும் மாடர்னா தடுப்பூசிகளின் பூஸ்டர் டோஸ்க்கு இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளன.