டில்லி:

பாபர் மசூதி இடிப்பு நாளான டிசம்பர் 6ந்தேதி அயோத்தியில் ராமர் கோவில்கட்டும் பணி தொடங்கும் என்று பாஜக எம்.பி. சாக்ஷி மகராஜ் தெரிவித்து உள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சர்ச்சைக்குறிய எம்.பிக்களில் சாக்ஷி மகராஜ் எம்.பி. முக்கியமானவர். ஏற்கனவே ஷரியத் நீதிமன்றம் கேட்பவர்கள் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் என்றும், டில்லியில் உள்ள ஜுமா மசூதியை இடித்து தள்ளுங்கள்.. அங்கு இந்துக் கடவுள்களின்  விக்கிரகங் கள் இல்லையெனில் என்னை தூக்கிலிடுங்கள் என்று பரபரப்பாகி சர்ச்சையை உருவாக்கியவர்.

தற்போது, பாபர் மசூதிஇடிப்பு நாளான டிசம்பர் 6ந்தேதி சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர்கோவில் கட்டும்  பணி தொடங்கும் என்று அறிவித்து உள்ளார்.

உ.பி. மாநிலம் அயோத்தியில் உள்ள பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர்கோவில் இருந்த தாக கூறி, கடந்த 1992ம் ஆண்டு கரசேவகர்களால் இடித்துத் தள்ளப்பட்டது. அதைத்தொடர்ந்து, சர்ச்சைக்குரிய நிலம் விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. விரைவில் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், தனது நாடாளுமன்றத் தொகுதியான உன்னாவோவில் செய்தியாளர்களிடம் பேசிய  பாரதிய ஜனதா கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாக்ஷி மகாராஜ், டிசம்பர் 6ந்தேதி முதல் அயோத்தியில் ராம் கோயில் கட்டுமான பணிகள் தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளார். “கட்டிடம் இடிக்கப்பட்ட தேதியில் கோயில் கட்டுமானம் தொடங்கப்பட வேண்டும் என்பது தர்க்க ரீதியானது” என்று  தெரிவித்து உள்ளார்.

“பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரின் முயற்சியால் இந்த கனவு நனவாகிறது” என்றும்,  அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது மில்லியன் கணக்கான இந்துக்களின் கனவை நனவாக்கும் என்றவர், கோவில் கட்டுமானத்திற்கு இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றிணைந்து உதவ வேண்டும் என்று கூறினார்.

“பாபர் ஒரு படையெடுப்பாளர், அவர்களின் மூதாதையர் அல்ல என்ற உண்மையை சுன்னி வக்ஃப் வாரியம் ஏற்றுக்கொள்ள வேண்டும்,” என்று கூறியவர்,  பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமியின் மனுவுக்கு பிறகுதான் அயோத்தி வழக்கின் விசாரணையை உச்சநீதி மன்றம் துரிதப்படுத்திதாகவும் கூறினார்.