டில்லி:

அயோத்தியில் சர்ச்சைக்குரிய பகுதியில் ராமர் கோவிலை கட்டலாம் என ஷியா வாரியம் உச்சநீதிமன்றத்தில் அபிடவிட் தாக்கல் செய்து உள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992ம் ஆண்டு இடிக்கப்பட்டது. அங்கு ராமர் கோவில் கட்டுவது தொடர்பான பிரச்சினை பல ஆண்டுகளாக உள்ளது. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளது.

இதற்கு பேச்சுவார்த்தை மூலம் சுமுக தீர்வு காணுமாறு உச்சநீதிமன்றம் ஆலோனை தெரிவித்தது. இந்த விவகாரத்தில் இணைந்துள்ள ஷியா வக்ஃபு வாரியம் உச்சநீதிமன்றத்தில் அபிடவிட்டை தாக்கல் செய்து உள்ளது.

அபிடவிட்டில், ‘‘சர்ச்சைக்குரிய பகுதியில் ராமர் கோவிலை கட்டலாம். குறிப்பிட்ட தொலைவில் இஸ்லாமியர் அதிகமாக வாழும் பகுதியில் மசூதியை கட்டலாம். பாபர் மசூதி ஷியா வாரியத்துக்கு சொந்தமானது. இதில் சன்னி இஸ்லாமிய வாரியத்திற்கு எந்த பங்கும் கிடையாது என கூறி உள்ளது. ஷியா மத்திய வக்ஃபு வாரியத்திற்கு மட்டுமே பேச்சுவார்த்தையில் ஈடுபடவும், பிற தரப்புடன் அமைதியான தீர்வுக்கு வரவும் உரிமை உள்ளது.

வழிபாடு பகுதியில் ஒலிபெருக்கிகளை இரு தரப்பும் தவிர்க்கவேண்டும். இப்பிரச்சனையில் அமைதியை ஏற்படுத்த ராமர் பிறந்த இடமாக கருதப்படும் இடத்தில் இருந்து குறிப்பிடத்தக்க தொலைவில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் இடத்தில் மசூதியை கட்ட முடியும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.