சென்னை

மாணவர்களுக்கு மன அழுத்தம் அளிக்கும் என்பதால் ஆன்லைன் வகுப்புக்களைத் தடை செய்ய  வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

கொரோனா அச்சம் காரணமாக பள்ளிகள் தாமதமாகத் திறக்கப்பட உள்ளன.  இதனால் பள்ளிப்பாடங்களை குறிப்பிட்ட கால கட்டத்துக்குள் முடிக்க முடியாது என்பதால் ஆன்லைன் வகுப்புக்கள் தொடங்கப்பட உள்ளன.   இதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.   இந்நிலையில் இந்த ஆன்லைன் வகுப்புக்களைத் தடை விதிக்கக் கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ராமதாஸ் தனது அறிக்கையில், “ஆன்லைன் வகுப்புக்கள் என்பது தமிழகத்தில் ஒரு புதிய நாகரீகம் ஆகி உள்ளது.   எந்தவகையிலும் இது வகுப்பறை கல்விக்கு ஈடாக முடியது.  இது தனியார்ப் பள்ளிகளில் மூடப்பட்ட தினங்களிலும் கல்விக் கட்டணம் வசூலிக்க புதிய உத்தியாக மட்டுமே பயன்படுத்தப்பட உள்ளது.  இதற்கு அரசின் பள்ளிக்கல்வித் துறை ஊக்கம் அளிப்பது வருத்தம் தருகிறது.

தற்போது இந்த கல்வியாண்டுக்கான வகுப்புக்கள் தொடங்கி இருக்க வேண்டும் என்பதால் தனியார்ப் பள்ளிகள் ஆனலைன் வகுப்புக்களை நடத்தலாம் என அரசு அனுமதி அளித்துள்ளது.  ஆனால் அரசுப் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புக்கள் நடத்தப் போவதில்லை.  அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பின்பற்றப்படும் அதே பாட திட்டத்தைத் தான் தனியார்ப் பள்ளிகளும் பின்பற்றுகின்றன.

இந்நிலையில் தனியார்ப் பள்ளிகளுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்த அனுமதி அளித்துள்ள அரசு அரசுப் பள்ளிகளுக்கு அனுமதி அளிக்கவில்லை.  இது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாதகம் ஆகாதா?   இந்த கேள்வி அரசுப் பள்ளிகளுக்கு ஆன்லைன் வகுப்புக்கள் தேவை என்பதற்காக இல்லை.  தனியார்ப் பள்ளிகளுக்கு நிறுத்தப்பட வேண்டும் என்பதற்காக ஆகும்.

அது மட்டுமின்றி தனியார்ப் பள்ளியில் கிராமப்புற ஏழை மாணவர்களும் படிக்கின்றனர்.  ஒரு வீட்டில் இரு குழந்தைகள் இருந்தால் இணைய வசதியுடன் உள்ள இரு மொபைல்கள் தேவைப்படும்.   சாதாரண மொபைலை பெரும்பாலானோர் பயன்படுத்தும் நிலையில் உள்ள போது இவ்வளவு செலவு செய்து பெற்றோர்களால் தனித்தனி  மொபைல்கள் வாங்கி தர முடியாது.

இதனால் மாணவர்களுக்கு மன அழுத்தம் மட்டுமே ஏற்படும்.  குறிப்பாக மழலையர் வகுப்புக்கும் ஆன்லைன் வகுப்புக்கள் நடத்தப்படும் என்பது ஒரு வகை கேலிக் கூத்தாகத் தோன்றுகிறது.  மேலும் பள்ளிகள் தொடங்கிய பிறகு மாணவர்கள் பாடங்களைப் படிக்கத் தொடங்குவதால் எந்த பாதகமும் உண்டாகாது.  எனவே ஆன்லைன் வகுப்புக்களைத் தடை செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித்துறையைக் கேட்டுக் கொள்கிறேன்” என் தெரிவித்துள்ளார்.