சேலம: சேலத்தில் இன்று பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பாமக பொதுக்குழுவில், பாமகவின்  கட்சி தலைவராக ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளதுடன், கூட்டணி முடிவு எடுப்பது உள்பட பல்வேறு  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

பாமகவை கைப்பற்றுவதில்,  தந்தை மகனுமான  ராமதாஸ் – அன்புமணி இடையே மோதல் வலுத்துள்ளது.  இதனால், இருவரும் தாங்களே உண்மையான பாமக என கூறி வருகின்றனர். இதற்கிடையில், பாமகவின் பொதுக்குழுவை கூட்டிய அன்புமணி, தன்னையே தலைவராக தேர்வு செய்துகொண்டார். இதை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்துள்ளது. தொடர்த்நது இரு தரப்பும் தங்கள் ஆதரவாளர்களை நீக்குவதும், சேர்ப்பதுமாக அதிரடி காட்டி வருகின்றனர். சமீபத்தில் பாமக கவுரவ தலைவர் ஜிகே மணியை அன்புமணி அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்தார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த பரபரப்பான சூழலில், பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு பொதுக்குழு சேலத்தில் இன்று நடைபெறும் என ராமதாஸ் அறிவித்திருக்கிறார். அதன்படி இன்று சேலத்தில் ராமதாஸ் தலைமையில்,   பாமக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது.  இந்த கூட்டத்தில்,  தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த அடையாள அட்டை பாஸ் வழங்கப்பட்ட நிர்வாகிகள் 4700 பேர் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இதில் பாமக கட்சியின் தலைவராக ராமதாஸை தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து முடிவு எடுக்க ராமதாசுக்கு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அன்புமணியின் பதவிக்காலம் மே 29 ஆம் தேதியுடன் முடிவடைந்துவிட்டதாகவும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து, பாமகவின் ஜி.கே. மணியை கட்சியில் இருந்து நீக்குவதாகக் கூறிய அன்புமணிக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் கட்சியின் கௌரவத் தலைவராக ஜி.கே. மணி, பொதுச் செயலாளராக முரளி சங்கர், பொருளாளராக சையத் மன்சூர் உசேன் ஆகியோர் தேர்வு செய்யப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பின்னர் “துரோகத்தை வீழ்த்துவோம், ராமதாஸின் கரத்தை வலுப்படுத்துவோம்” என அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

பொதுக்குழு  கூட்டத்தில் பேசிய பாமக செயல் தலைவர் ஸ்ரீகாந்தி, “அன்புமணி வேண்டுமெனால் தனியாக கட்சி தொடங்கட்டும். இது ராமதாஸ் வளர்த்தெடுத்த கட்சி. அவர்தான், பாமக எனும் கோட்டைக்கு ராஜா. இதற்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது.

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் எம்எல்ஏக்களின் பலத்துடன் நாம் சட்டப்பேரவைக்குள் நுழைவோம்” என்று பேசினார்.

பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவராக இருந்த அன்புமணியின் மனைவி சௌமியா அன்புமணி, அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

[youtube-feed feed=1]