பாட்னா:

படிப்பறிவு இல்லாத பெண்களை இழிவுபடுத்தியதற்கு ராம் விலாஸ் பஸ்வான் மன்னிப்பு கேட்காவிட்டால், தர்ணா போராட்டம் நடத்தப் போவதாக அவரது மகள் எச்சரித்துள்ளார்.


லோக் ஜன சக்தி தலைவர் ராம் விலாஸ் பஸ்வான் கடந்த மக்களவைத் தேர்தலில், நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளக் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டார்.
தற்போது மத்திய அமைச்சராகவும் இருக்கிறார்.

சமீபத்தில், பொருளாதார ரீதியில் பொது வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டு, குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்த மசோதாவை லாலு பிரசாத் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் கடுமையாக எதிர்த்தது,
இது குறித்து கருத்து கூறிய ராம் விலாஸ் பஸ்வான், படிக்காதவர்கள் எல்லாம் இப்போது முதலமைச்சராக முடிகிறது என்று ராப்ரி தேவியை மறைமுகமாக சாடியிருந்தார்.

கடந்த 1999-ம் ஆண்டு ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவ் சிறைக்கு சென்றபின், அவரது மனைவி ராப்ரி தேவி பீகார் முதலமைச்சரானார். அப்போது அவரது கல்வித் தகுதி பெரும் விவாதத்துக்குள்ளானது.

இந்நிலையில், ராமவிலாஸ் பஸ்வான் தெரிவித்த கருத்தை அவரது மகள் ஆஷா கடுமையாக எதிர்த்துள்ளார். ராம் விலாஸ் பஸ்வானின் முதல் மனைவியின் மகள்தான் இந்த ஆஷா.

1981-ல் ஆஷாவின் தாயாரை விவகாரத்து செய்துவிட்டு, 1983-ல் வேறு திருமணம் செய்துகொண்டார். இது குறித்து குறிப்பிட்டுள்ள ஆஷா, நானும் என் அம்மாவும் படிப்பறிவு இல்லாதவர்கள் தான் என்று சாடியுள்ளார்.

படிப்பறிவு இல்லாதவர்கள் முதல்வராக முடிகிறது என்று கூறியதன் மூலம் பஸ்வான் அனைத்து படிப்பறிவில்லாத பெண்களையும் அவமானப் படுத்தியுள்ளார்.

மன்னிப்பு கேட்காவிட்டாவிட்டால், பாட்னாவில் உள்ள தந்தையின் கட்சி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ஆஷா எச்சரித்துள்ளார்.