ராமர் கோயில் கட்டுமான பணி நடந்து வரும் அயோத்தியில் அரசு ஒதுக்கிய இடத்திற்கு அருகில் உள்ள பல்வேறு இடங்களை கோயில் அபிவிருத்தி திட்டத்திற்காக என்று கூறி ராமர் கோயில் அறக்கட்டளை நிர்வாகம் வாங்கி வருகிறது.

சர்ச்சைக்குரிய இடத்தின் வழக்கு நிலுவையில் இருந்த காலத்தில் அந்த இடத்திற்கு அருகில் உள்ள இடங்களை வாங்கியும் ஆக்கிரமிப்பு செய்து வந்தவர்கள் பலரும், தற்போது உள்ளூர் அரசியல்வாதிகளின் துணையுடன் அந்த நிலங்களை ராமர் கோயில் அறக்கட்டளைக்கு கொள்ளை லாபத்தில் விற்று வருகின்றனர்.

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு அறக்கட்டளை அமைக்கப்பட்டதை தொடர்ந்து இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து நில விற்பனை படுஜோராக நடந்து வருகிறது.

இந்த நில விற்பனை பலவற்றில் அயோத்தி நகரின் மேயர் ரிஷிகேஷ் உபாத்யாய் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர் அனில் மிஸ்ரா ஆகிய இருவரும் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்டு வந்திருக்கின்றனர்.

அறக்கட்டளை வாங்கிய இடம்

ஏற்கனவே 2 கோடி ரூபாய்க்கு வாங்கிய 2.96 ஏக்கர் நிலத்தை 18.5 கோடி ரூபாய்க்கு, அதாவது 5 நிமிடத்தில் 16 கோடி ரூபாய் பொதுப்பணம் சுருட்டப்பட்ட நில விற்பனை விவகாரத்தில் இவ்விருவரும் சாட்சி கையெழுத்து போட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சுல்தான் அன்சாரி மற்றும் ரவி திவாரி ஆகியோரிடம் இருந்து ராமர் கோயில் அறக்கட்டளை 18.5 கோடி ரூபாய்க்கு வாங்கிய இந்த நிலத்தை குசும் பதக் என்பவரிடம் இருந்து 2 கோடி ரூபாய்க்கு சுல்தான் அன்சாரி மற்றும் ரவி திவாரி வாங்கினர்.

இந்த நிலத்தை 5 நிமிடத்திற்கு முன் வேறொருவருக்கு விற்ற குசும் பதக் மற்றும் அவரது கணவர் ஹரிஷ் பதக் ஆகியோர் மீது உத்தர பிரதேச மாநிலத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் ஆள்மாறாட்டம், மோசடி, நம்பிக்கை துரோகம் உள்ளிட்ட பல்வேறு மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன.

குசும் பதக் மற்றும் அவரது கணவர் ஹரிஷ் பதக்

குசும் பதக்கின் கணவர் ஹரிஷ் பதக் 2018 ம் ஆண்டு அயோத்தி கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தால் தேடப்படும் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்ச்சைக்குரிய இந்த நிலத்தை வாங்கிய அதே நாளில், குசும் பதக் மற்றும் அவர் கணவர் ஹரிஷ் பதக் தங்கள் பெயரில் இருந்த சுமார் 2.5 ஏக்கர் கொண்ட மற்றொரு நிலத்தை ராமர் கோயில் அறக்கட்டளைக்கு 8 கோடி ரூபாய்க்கு நேரடியாக விற்பனை செய்துள்ளனர்.

சுல்தான் அன்சாரி மூலம் வாங்கிய நிலத்திற்கு சதுர அடி ஒன்றுக்கு ரூ. 1423 கொடுத்த கோயில் அறக்கட்டளை பதக்கிடம் வாங்கிய நிலத்திற்கு சதுர அடி ஒன்றுக்கு ரூ. 716 தான் கொடுத்தது.

பதக் மற்றும் சுல்தான் அன்சாரி ஆகியோரிடம் இருந்து ராமர் கோயில் அறக்கட்டளை வாங்கிய இந்த இரண்டு நிலத்தின் ஒப்பந்த பத்திரத்திலும் ரிஷிகேஷ் உபாத்யாய் சாட்சியாக கையெழுத்து போட்டிருக்கிறார்.

2009 ம் ஆண்டு சாகேத் ஆட்டு பண்ணை நிறுவனம் என்ற பெயரில் ஆடு வளர்க்கும் திட்டத்திற்காக மாநிலம் முழுவதும் பல்வேறு நபர்களிடம் இருந்து பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக ஹரிஷ் பதக் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்கு நிலுவையில் உள்ளது.

வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகாத ஹரிஷ் பதக்கை 2018 ம் ஆண்டு தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பதக்கிடம் வாங்கிய இந்த நிலத்தின் மீது உரிமை கோரி வஃக்ப் வாரியம் ஏற்கனவே வழக்கு தொடுத்திருந்தது என்பதும் அப்போது அதுகுறித்த அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்ததும், அதனை இப்போது அகற்றி இருப்பதும் தி நியூஸ் லாண்டரி நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதேபோல், 2021 பிப்ரவரி மாதம் 35.6 லட்சம் சந்தை மதிப்புள்ள 9500 சதுர அடி நிலத்தை 20 லட்ச ரூபாய்க்கு வாங்கிய மூன்று மாதம் கழித்து மே மாதம் ராமர் கோயில் அறக்கட்டளைக்கு 2.5 கோடி ரூபாய்க்கு விற்ற தீப் நாராயண் என்பவரும் ரிஷிகேஷ் உபாத்யாயா-வின் உறவினர் என்பது தெரியவந்திருக்கிறது.

தீப் நாராயணனின் நில பரிவர்த்தனை

அயோத்தியில் ராமர் கோயில் பெயரால் நடந்து வரும் நில மோசடி மற்றும் நன்கொடைகள் கையாடல் குறித்த விவரங்களை தி நியூஸ் லாண்டரி இதழ் வெளியிட்டுள்ளது.

மோசடி நபர்கள், அரசியல்வாதிகள் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் ஆகியோர் தொடர்புடைய இந்த விவகாரம் கடந்த வாரம் வெளியானது முதல் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளதோடு, நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வழங்கிய நன்கொடை கோடிக்கணக்கில் சுருட்டப்படுவது குறித்து உத்தர பிரதேச மாநில மற்றும் மத்திய பா.ஜ.க. அரசு உரிய விசாரணை நடத்தி நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும் என்றும் கோயில் கட்டிமுடிக்கும் வரை அபிவிருத்தி என்ற பெயரில் ராமர் கோயில் அறக்கட்டளை வேறு எந்த ஒரு நிலத்தையும் வாங்க கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.