ஸ்ரீநகர்

காஷ்மீர் குறித்த பிரதமர் மோடியின் ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி பங்கேற்பது குறித்து நாளை அறிவிக்க உள்ளார்.

காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் விதி எண் 370 கடந்த 2019 ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது.  அம்மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன.   இதில் லடாக் யூனியன் பிரதேசம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.  மற்றொரு ஒன்றியம் பிரதேசமான ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பியதும் மாநில அந்தஸ்து அளித்து தேர்தல் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

ஜம்மு காஷ்மீரில் தற்போது இயல்பு நிலை திரும்பி வருவதால்  அங்கு மாநில் அந்தஸ்து அளித்து சட்டப்பேரவை தேர்தல் நடத்துவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன.   இதையொட்டி பிரதமர் மோடி வரும் 24 ஆம் தேதி டில்லியில் ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடத்த உள்ளார் .  கூட்டத்தில் பங்கேற்க மெகபூபா முஃப்தி, ஃபரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா உள்ளிட்ட 14 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நேற்று ஸ்ரீநகரில் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வது குறித்து மெகபூபா வீட்டில் அவரது மக்கள் ஜனநாயக கட்சியின் அரசியல் விவகாரக் குழு கூடி விவாதித்துள்ளது.  டில்லியில் பிரதமர் நடத்தும் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து மெகபூபா முடிவு எடுக்கலாம் என தீர்மானிக்கப்பட்டது.  கூட்டத்தில் பங்கேற்பது குறித்து நாளை முடிவு எடுக்கப்படும்  என மெகபூபா முஃப்தி அறிவித்துள்ளார்.