ந்தியா உலகுக்கு யோகக்கலையை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து ஜூன் 21ந்தேதி அன்று சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது.

யோகா உடல்பயிற்சி  மட்டுமல்ல.  நாம், நம்முடனும், உலகத்துடனும், இயற்கையுடனும் ஒன்றாக இருக்கும் உணர்வைக் கண்டுபிடிப்பதைப் பற்றியதே யோகா. பழங்கால இந்திய மரபின் விலைமதிக்க முடியாத பரிசே யோகாவாகும். மனதிற்கும் உடலுக்கும் இடையில் இயைபை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட ஓர் ஆன்மீகத் துறை அது. யோகாவின் முக்கியத்துவம் உலக சமுதாயத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
ஐக்கியநாடுகளின் பொதுச் சபை, 2014, டிசம்பர் 11-ஆம் தேதி  யோகாவை ஏற்றுக்கொண்ட ஜூன் 21 ஆம் நாளை உலக யோகா தினமாக அறிவித்தது.  ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில், மாண்புமிகு இந்திய பிரதம மந்திரிநரேந்திர மோடி அவர்கள் விடுத்த வேண்டுகோளைத் தொடர்ந்தே ஜூன் 21-ஆம் நாளை உலக யோகா தினமாக ஒரு தீர்மானத்தின் மூலம் அங்கீகரித்தது. நோய்த்தடுப்பு, உடல்நல மேம்பாடு, பல வாழ்க்கைமுறைக் கோளாறுகளைக் கட்டுப்படுத்தல் போன்றவற்றில் யோகாவின் முக்கியத்துவத்தை பற்றிப் பிரதம மந்திரி அவர்கள் வலியுறுத்தி உள்ளார். மேலும் அவர், இந்திய அரசின், வெளிவிவகாரத் துறை அமைச்சகத்தால் ஓர் அதிகாரபூர்வமான வலைத்தளம் (mea.gov.in/idy.htm) இயக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். யுனெஸ்கோவின் யோகா இணையதளத்தை பாரிசில் அவர் தொடங்கி வைத்தார் (www.Idayofyoga.Org).

ஆரோக்கியத்திற்காக யோகா

ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான  இந்தியாவின்  நிரந்திரத் திட்டத்தால்  நடத்தப்படும் 2017 ஆம் ஆண்டு கொண்டாட்டத்துக்கான  கருத்துரு “ஆரோக்கியத்திற்காக யோகா” என்பதாகும். மனம் மற்றும் உடலுக்கு இடையிலான சமநிலையை அடைய முழுமை சார்ந்த வழிமுறையில்  யோகா  உதவும் என்பதை இக்கருத்துரு உணர்த்துகிறது. சுகாதாரம் மற்றும் நலவாழ்க்கைக்கான இந்த அணுகு முறை, நிலையான வளர்ச்சியையும் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை முறையையும் நோக்கி நகரும் மனித குல  முயற்சி வெற்றி அடைய நேரடியான மற்றும் பயனுள்ள பங்களிப்பை வழங்கும்.

‘இணை’ அல்லது ‘சேர்’ என்று பொருள் தரும்  ‘யுஜ்’ என்ற சமஸ்கிருத சொல்லில் இருந்து உருவானதே யோகா என்ற சொல். யோகா, ஒருவரின் உடல், மனம், உணர்வு, ஆற்றல் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு முழுமையான கருத்துரு. இதன் அடிப்படையில் யோகா நான்கு பெரும் வகைகளாக பிரிக்கப்படுகிறது: கர்ம யோகாவில் உடலைப் பயன்படுத்துகிறோம்; ஞான யோகாவில் மனதைப் பயன்படுத்துகிறோம்; பக்தி யோகாவில் உணர்வையும் கிரியா யோகாவில் ஆற்றலையும் பயன்படுத்துகிறோம்.

ஞானி பதஞ்சாலி, யோக அறிவியலை குறியீடாக்கி, அதன் எட்டு பிரிவுகளை “அஷ்டாங்க யோகா” என்று அழைத்தார்.  அவையாவன: யமா, நியமா, ஆசனா, பிரணாயமா, பிரத்யாகரா, தாரணா, தியானா மற்றும் சமாதி. யோகாவின் பொதுவான வடிவம் பல்வேறு ஆசனங்கள் ஆகும். அவை உடலுக்கும் உள்ளத்திற்கும் நிலைத்தன்மையைக் கொண்டு வருகின்றன. ஒவ்வொரு ஆசனமும் வெவ்வேறு பலன்களைத் தரும். இந்த ஆசனங்களை அவரவர் திறனுக்குத் தக்கபடி ஒரு யோகா குருவின் வழிகாட்டுதல் படி பயிற்சி செய்ய வேண்டும்.

தடுப்பு மற்றும் ஊக்கும் தன்மைகளால் மட்டுமன்றி, பல்வேறு வாழ்க்கை முறை நோய்களையும் கோளாறுகளையும் கட்டுப்படுத்துவதால் யோகா இன்று உலகம் முழுவதும் புகழ் பெற்று வருகிறது. உள்ளம் மற்றும் உணர்ச்சிக் கோளாறுகளைக் கட்டுப்படுத்துவதில் அது மிகவும் உதவிகரமாக உள்ளது. இதனால், இன்று உலகம் முழுவதும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாக யோகா பயிலப்படுகிறது.

உடல்பருமன், நீரிழிவு, மிகை இரத்த அழுத்தம், மனக்கலக்கம் ஆகிய ஆரோக்கியப் பிரச்சினைகள் பரவலாக இருக்கும் இன்றைய வாழ்க்கை முறையில் யோகா ஒரு முழுமையான சுகாதார நடைமுறையாகும். உடற்தகுதி, தசை-எலும்பு செயல்பாடு, இதய-இரத்தக் குழல் ஆரோக்கியம் ஆகியவற்றிற்கு யோகா நன்மை பயக்கும். நீரிழிவு, சுவாசக் கோளாறுகள், இரத்த அழுத்தம், வாழ்க்கைமுறை குறைபாடுகள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த யோகா உதவுகிறது. மனவழுத்தம், களைப்பு, மனக்கவலை போன்ற கோளாறுகளைக் குறைக்கவும் யோகா துணை புரிகிறது.

யோக பயிற்சியால் ஒருவர் மனதையும் உடலையும் இணைத்து நீடித்த ஆரோக்கியத்தை பெறலாம்.

யோகாவை முறையாக பயிற்சி செய்தால் இரத்த அழுத்தம் சீராகும், மன அழுத்தம் குறையும், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புத்  தன்மையை நீங்கும். அழகிய உடல் அமைப்பை பெறவும் ஆரோக்கியமாக இருக்கவும் சீரான எடையை பேணவும் யோக நமக்கு வழிகாட்டி வருகின்றது. மூளையையும், உடல் ஆரோக்கியத்தையும் பலப்படுத்தும் யோகா மூளையின் உட்பிரிவு சம்பந்தமான பிரச்சினைகளையும் சரிசெய்கின்றது.
யோசிக்கும் திறனை மேம்படுத்தும் தன்மை யோகாவிற்கு உள்ளது. மூளைக்கும் உணர்வுக்கும் சமநிலை இல்லாத நிலை ஆரோக்கியமற்றது. யோகா செய்வதால் முழுமையான உடல் அமைப்பையும், ஆரோக்கியத்தையும் பெற முடியும். மேலும் நோயற்ற வாழ்வை மகிழ்ச்சியுடனும்,  மன அமைதியுடனும் கொண்டாட முடியும்.
யோகாசனங்களை தினமும் செய்தால், தொப்பை வராமல் தட்டையான வயிற்றை பெறலாம். யோகாவின் முலம் இதய நோய்களை கூட குணப்படுத்த முடியும். இதனால் இரத்த ஓட்டம் சீரடைந்து இரத்த அடைப்பை போக்கி ஆரோக்கியமான இதயத்தை பெற முடிகின்றது.
யோகாவின் மூலம் தசைகள் தளர்வடைவதால் முதுகு வலி, கால் வலி போன்ற வலிகளில் இருந்து விடுபடலாம். உட்கார்ந்த இடத்தில் வேலை பார்ப்பவர்களும், டிரைவர்களும் தினமும் யோகா செய்ய வேண்டும். இதனால் முதுகு தண்டுகளில் பிடிப்புகளை போக்க முடியும்.
மூச்சு பயிற்சியால் சீரான சுவாசத்தை பெற முடியும். யோகா செய்வதால் நுரையீரல்களை சீர்படுத்தி சீரான சுவாசதத்தைப் பெறலாம். அதிலும் ஆழமான மூச்சு பயிற்சி உடல் வலிமையை கூட்டி மன அழுத்தத்தை போக்குகின்றது. முதுகு வலி போன்ற அனைத்து வலிகளுக்கும் யோகா  நிவாரணம் அளிக்கின்றது. இதனால் உடல் வலிமை அடைவதுடன், மூளையும் சீராக செயல்படுகின்றது.
கடினமான வேலையை செய்தவுடன் யோகா செய்தால், மன அழுத்தத்தை போக்கி கொள்ள முடியும். யோகா மட்டும் இல்லை மற்ற  உடற்பயிற்சிகளாலும் மன அழுத்தத்தை போக்க முடியும்.
“யோகா உடல்பயிற்சி குறித்ததல்ல; நாம், நம்முடனும், உலகத்துடனும், இயற்கையுடனும் ஒன்றாக இருக்கும் உணர்வைக் கண்டுபிடிப்பதைப் பற்றியதே”