ராமர் கோயில் திறக்கப்பட உள்ளதை அடுத்து அயோத்திக்கு மக்கள் கூட்டம் படையெடுக்கத் துவங்கியுள்ளது.
ஜனவரி 22ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ள ராமர் சிலை நிறுவும் நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக சுமார் 6000 பேர் கலந்து கொள்ள உள்ளனர்.
பொதுமக்கள் யாரும் அன்றைய தினம் அனுமதிக்கப்படவில்லை என்ற போதும் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தைக் காண லட்சக்கணக்கான மக்கள் அயோத்தியில் திரண்டுள்ளனர்.
இதனை அடுத்து ஜனவரி 23ம் தேதி முதல் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அயோத்தியில் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ராமர் கோயிலை மையமாக வைத்து அயோத்தியில் பல்வேறு வியாபாரம் களைகட்ட துவங்கியுள்ளது.குறிப்பாக தங்கும் விடுதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
7 நட்சத்திர சைவ உணவகத்துடன் கூடிய விடுதி உள்ளிட்ட 100க்கும் அதிகமான ஹோட்டல்கள் உள்ள நிலையில் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் ராம பக்தர்களின் தேவைக்காக மேலும் 50 ஹோட்டல்கள் கட்டப்பட்டு வருகிறது.
ஓபராய், ராடிசன், தாஜ் என பிரபல நட்சத்திர விடுதிகள் போட்டிபோட்டுக் கொண்டு ஹோட்டல்களை திறந்து வருகின்றன.
இந்த விடுதிகளின் வாடகை மிகவும் அதிகமாக உள்ளதை அடுத்து மக்கள் தர்ம சத்திரங்கள், விருந்தினர் மாளிகைகள் மற்றும் ஹோம் ஸ்டே உள்ளிட்ட குறைந்த பட்ஜெட் தங்குமிடங்களை தேடி அலையும் நிலையில் பலர் திறந்தவெளியில் தங்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த ஒரு ஆண்டில் மட்டும் அயோத்தியில் 600 வீடுகள் ஹோம்ஸ்டே சான்றிதழுக்கு விண்ணப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் 464 வீடுகளுக்கு ஹோம் ஸ்டே அனுமதி வழங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
ஹோம் ஸ்டே மூலம் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம் முன்னேறும் என்று கூறப்படுவதை அடுத்து உ.பி. அரசு இதனை ஊக்குவித்து வருவதோடு இதன் எண்ணிக்கையை உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது.
2 முதல் 5 அறைகள் கொண்ட வீடுகளை தங்குமிடங்களாக மாற்ற அனுமதி வழங்க உ.பி. அரசு முன்வந்துள்ளதுடன் நாளொன்றுக்கு ரூ. 1500 முதல் ரூ. 2500 வரை அதற்கு வாடகை வசூலிக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. அயோத்தி தவிர அதனை சுற்றியுள்ள கிராமங்களிலும் இதுபோன்ற தங்கும் விடுதிகளை திறக்க அரசு ஊக்குவித்து வரும் நிலையில் ராமர் கோயிலை மையமாக வைத்து வியாபாரம் களைகட்டியுள்ளது.