டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல்கட்ட தொடர் மார்ச் 13ந்தேதி வரை ஒத்தி வைப்பதாக ராஜ்யசபா தலைவர் ஜகதீப் தங்கர் அறிவித்தார். அதானி குழுமத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்த இடையூறு காரணமாக பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி ஒத்திவைக்கப்பட்டது.

2023ம் ஆண்டின் பட்ஜெட் கூட்டத்தொடர், ஜனவரி 31ந்தேதி குடியரசு தலைவர்  உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து பிப்ரவரி 2ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 10 நாள்களாக இரு அவைகளிலும் அதானி குழும முறைகேடு புகார் குறித்து விவாதிக்க வேண்டும் என்றும், நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த  நிலையில், பட்ஜெட் தொடரின் முதல் பாதியின் கடைசி நாளான இன்று காலை முதல் மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கமிட்டதால் அவை நடவடிக்கைகள் முடங்கியது. தொடர்ந்து, முதல் பாதி நிறைவு பெறுவதாக அறிவித்து மார்ச் 31ஆம் தேதி வரை மாநிலங்களவை ஒத்திவைப்பதாக அவைத் தலைவர் ஜகதீப் தன்கர் அறிவித்தார்.