டெல்லி: மணிப்பூர் கலவரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், மாநிலங்களவை மதியம் 2மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், நாடாளுமன்ற புதிய கட்டிடத்தில் இன்று காலை 11மணி அளவில் தொடங்கியது. இன்றைய அவை நடவடிக்கைகளைத் தொடர்ந்து, மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. அதையடுத்து, மக்களவை மதியம் 2மணி வரையிலும், மாநிலங்களவை மதியம் 12மணி வரையிலும் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், மதியம் 12மணிக்கு மீண்டும் மாநிலங்களவை கூடியதும், எதிர்க்கட்சிகள் மணிப்பூரில் ஏற்பட்டுள்ள வன்முறை மற்றும் மணிப்பூரில் பெண்களுக்கு ஏற்பட்ட கொடுமையைப் பற்றி விவாதிக்க வலியுறுத்தினார். மணிப்பூர் வன்முறை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி அவைக்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டும் இது தொடர்பாக ஏற்கனவே நோட்டீஸ் கொடுத்துள்ளதால், அதை விவாதிக்க மாநிலங்களவைத் தலைவர் அனுமதி வழங்க வேண்டும் என காங்கிரஸ், திமுக உள்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷமிட்டு கடும் அமளியில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து, மாநிலங்களவை தலைவர், மணிப்பூர் கலவரம் தொடர்பாக விவாதிக்க குறுகிய காலம் மட்டுமே அவகாசம் அளிக்கப்படும் என்றதும் மாநிலங்களவையில் அமளி ஏற்பட்டது. இதையடுத்து அவை மதியம் 2மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.