டெல்லி: மணிப்பூரில் பாலியல் வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று தேசிய தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு ஆவேசமாக தெரிவித்துள்ளார். அதுபோல மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி இது மனிதாபிமானமற்ற செயல் என்று கண்டித்துள்ளார்.

மணிப்பூரில்  இரு சமூகத்தினரிடையே கடந்த 2 மாதங்களாக நடந்து வரும் கலவரம் உச்சத்தை அடைந்து உள்ளது. அங்கே கலவரத்தில் குகி பிரிவை சேர்ந்த பழங்குடி பெண்களை மற்றொரு சமூகமான மைதேயி  பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள் இரண்டு பெண்களை சாலையில் நிர்வாணமாக அழைத்து சென்று, வயலில் வைத்து பல ஆண்கள் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். கடந்த மே மாதம் 4ம் தேதி நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ இப்போதுதான் வெளியாகி உள்ளது.  இது நாடு முழுவதும்  அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இத்தனை நாட்கள் கழித்து வீடியோ வெளியான காரணத்தால் இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. பிரதமர் மோடி, உச்சநீதிமன்றம் என அனைத்து தரப்பினரும் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில்,  தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு தனது கண்டனத்தை டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,  ‘எந்தவொரு சூழ்நிலையிலும் இத்தகைய குற்றத்தில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் மரண தண்டனையைத் தவிர வேறு எதையும் கேட்க முடியாது. இதுபோன்ற கொடூரமான குற்றத்தில் ஈடுபட்ட ஆண்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும், இதனை வேடிக்கை பார்த்தவர்களையும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். வகுப்புவாத கலவரங்கள், குடும்பச் சண்டை, தனிப்பட்ட பழிவாங்கல் அல்லது வேறு ஏதேனும் பிரச்னைகளுக்கு பெண்கள் குறிவைக்கப்படுகிறார்கள். சில ஆண்கள் எவ்வளவு முதுகெலும்பில்லாதவர்கள், கோழைத்தனமானவர்கள், பாதுகாப்பற்றவர்கள், மனிதாபிமானமற்றவர்கள் என்று இது காட்டுகிறது’ என்று பதிவிட்டுள்ளார்.

அதுபோல இந்த விவகாரம் குறித்து மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் , ‛‛மணிப்பூரில் 2 பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை தொடர்பான வீடியோ கண்டிக்கத்தக்கது. இது மனிதாபிமானமற்ற செயல். இதுபற்றி மணிப்பூர் முதல்வர் பீரன் சிங்கிடம் பேசினேன். தற்போது விசாரணை நடைபெற்று வருவதாகவும், குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான முயற்சி ஒருபோதும் கைவிடப்படாது எனவும் தெரிவித்துள்ளார்” என்று அவர் தெரிவித்துள்ளார்.