சென்னை: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளான முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் இன்னும்  ஒருவாரத்தில் இலங்கை அனுப்பப்படுவர் என தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளான  முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோருக்கு இலங்கை துணை தூதரகம் பாஸ்போர்ட் வழங்கியுள்ளதாகவும் ஒரு வாரத்திற்குள் மூவரும் இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வந்தவர்களை உச்சநீதிமன்றம் விடுதலை செய்த நிலையில், அவர்கள் திருச்சி முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள முருகன் தனக்கு அடையாள அட்டை வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில்,  “லண்டனில் உள்ள எனது மகளுடன் சென்று வசிப்பதற்கு விசா எடுக்க விண்ணப்பிக்க போகிறேன். அதற்கு விண்ணப்பிக்க வேண்டும் எனில், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை கட்டாயம் ஆகும். எனவே தனக்கு உரிய அடையாள அட்டையை வழங்கும்படி கடந்த ஜனவரி மாதம் மறுவாழ்வு இயக்குநரிடம் விண்ணப்பித்தேன். ஆனால், அந்த விண்ணப்பத்தின் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே அடையாள அட்டை வழங்க மறுவாழ்வு இயக்குநருக்கு உத்தரவிட வேண்டும்” எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற  நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன்  அமர்வில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ஒருவர் வழக்கின் விசாரணையில் இருந்து விலகிய நிலையில், இன்று   நீதிபதிகள் ஆர்.சுரேஷ் குமார், குமரேஷ் பாபு ஆகியோர் அமர்வில் விசாரிக்கப்பட்டது.

விசாரணையின்போது ஆஜரான  தமிழக அரசு சார்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர். முனியப்பராஜ், “முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய மூவருக்கும் இலங்கை துணை தூதரகம் தரப்பில் பாஸ்போர்ட் வழங்கவிட்டது. மூவரையும் இலங்கைக்கு அனுப்ப அனுமதி கோரி மத்திய அரசு  கடிதம் எழுதப்பட்டுள்ளது. மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் ஒருவாரத்தில் மூவரும் இலங்கைக்கு அனுப்பப்படுவர்.” என்று கூறினார்.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இலங்கை தூதரகத்தால் பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ள நிலையில் அடையாள அட்டை தேவையில்லை எனக்கூறி முருகனின் மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.