டெல்லி: ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளில் ஒருவரான பேரறிவாளனை ஏன் விடுவிக்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஏற்கனவே அவருக்கு உச்சநீதி மன்றம் ஜாமின் வழங்கிய நிலையில் தற்போது ஏன் விடுதலை செய்யக்கூடாது என்று கேள்வி எழுப்பி உள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி  படுகொலை செய்யப்பட்ட வழக்கில்,  முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய எழுவர் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகளாக சிறை வாசம் அனுபவித்து வருகின்றனர். அவர்களை விடுவிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அவர்களது விடுதலையில் தமிழக அரசே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவிட்டது.,

அதைத்தொடர்ந்து, தமிழகஅரசும் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளது. ஆனால், பல ஆண்டுகாலமாக ஆளுநர் அதன்மீது முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். இதை எதிர்த்து பேரறிவாளன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளன் வழக்கு தொடர்ந்தார். ஆனால் 7 பேரை விடுவிக்க குடியரசுத் தலைவருக்கே அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்றத்தில் உள்துறை மூலம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால், அதை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம் 7 பேர் விடுதலையில் காலம் தாழ்த்திய ஆளுநரின் நடவடிக்கை ஏற்புடையதல்ல என்று சாடியிருந்தது. தொடர்ந்து இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது, அப்போது, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பேரறிவாளனை ஏன் விடுவிக்க கூடாது என்று அதிரடியாக கேள்வி எழுப்பியது.  மேலும், இந்த வழக்கில் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை என்று சாடியது.

அதைத்தொடர்ந்து, பேரறிவாளன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,  மாநில அரசின் தீர்மானம் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார் என்று  குற்றம் சாட்டினார்.  பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநரின் பதில் ஒவ்வொரு முறையும் முரணாகவே உள்ளது. ஆளுநர் அமைச்சரவை முடிவுக்கு எதிராக சொந்த கண்ணோட்டத்தில் செல்ல தனி அதிகாரமில்லை. உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பின் படி, 7 பேர் விடுதலை விவகாரத்தில் அமைச்சரவையே முடிவெடுக்கலாம். அமைச்சரவை முடிவுக்கு எதிராக ஆளுநர் சென்றால் அது கூட்டாட்சி அமைப்பில் மிகப்பெரிய பாதகத்தை ஏற்படுத்தும்.

இதையெல்லாம் தவிர்க்க, ஆளுநர், குடியரசுத் தலைவர், அதிகாரம் குறித்த விஷயங்களுக்கு போகாமல் பேரறிவாளனை நாங்கள் ஏன் விடுவிக்கக் கூடாது? பேரறிவாளனை நாங்களே விடுவித்து இந்த வழக்கை முடித்துவைக்க ஒரே தீர்வு என கருதுகிறோம் என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

பேரறிவாளன் விவகாரத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் அரசுக்கு உள்ளது என ஏற்கெனவே தெளிவாகிவிட்டது. அதனால், பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் ஆளுநரை மத்திய அரசு கொண்டு வரவேண்டாம் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், இதுகுறித்து கருத்து தெரிவிக்க மறுத்த நீதிபதிகள், இந்த விஷயத்தில்,   ஆளுநர் அல்லது குடியரசு தலைவர் அதிகாரம் குறித்த விஷயங்களுக்குள் போக விரும்பவில்லை என்றும்,   நாங்கள் ஏன் பேரறிவாளனை விடுதலை செய்ய உத்தரவிட கூடாது என்று கேள்வி எழுப்பினர். மேலும், பேரறிவாளனை விடுவிப்பது மட்டும் தான் இந்த வழக்கை முடித்து வைப்பதற்கான ஒரே தீர்வு என கருத்து தெரிவித்த உச்சநீதி மன்றம், அவரை யார் விடுவிக்க வேண்டும் என்பதில் உள்ள சிக்கல்களில் அவர் ஏன் சிக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.