சென்னை

ராமர் கோவிலில் முதலில் தரிசனம் செய்த 150 பேரில் தாமும் ஒருவர் என நடிகர் ரஜினிகாந்த் பெருமிதத்துடன் கூறி உள்ளார்.

நேற்று உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை விழா பக்தர்களின் பக்தி கோஷம் முழங்கக் கோலாகலமாக நடந்தது. விழாவில் பால ராமர் பிரதிஷ்டையைத் தொடர்ந்து பிரதமர் மோடி முதலில் தீப ஆராதனை காட்டி வழிபாடு நடத்தினார்.

இந்தியாவில் உள்ள முக்கிய பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு பிரபலங்கள் என ஏராளமானோர் இந்த நிகழ்வில்,பங்கேற்றனர். அதாவது ரஜினி, அமிதாப்பச்சன், சிரஞ்சீவி, ராம் சரண், அபிஷேக் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், கத்ரினா கைஃப், கங்கனா ரணாவத் எனத் திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

ராமர் கோவில் பிரதிஷ்டை விழாவை முடிந்து இன்று நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார்.  அப்போது ரஜினிகாந்த் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

ரஜினிகாந்த்,

“அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகும். இதில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது என்னுடைய வாழ்நாள் பாக்கியமாகக் கருதுகிறேன். ஒவ்வொரு வருடமும் கண்டிப்பாக அயோத்தி ராமர் கோவிலுக்கு வருவேன்.

அயோத்தி ராமர் கோவில் விழாவை நான் ஒரு ஆன்மீக நிகழ்வாகத்தான் பார்க்கிறேன்.  ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கும் அனைவரின் பார்வையும் ஒரே மாதிரி இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ராமர் முகத்தைத் திறந்ததும் முதலில் பார்த்த 150 பேரில் நானும் ஒருவன். அதில் எனக்கு மிகவும் சந்தோஷம்’ 

என்று பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.