கிழக்கு சீமையிலே, வருத்தப்படாத வாலிபர் சங்கம், உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்த தவசிக்கு உணவுக்குழாயில் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது.

முதலில் அவருக்கு சென்னையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிப்பட்ட தவசி இப்போது டாக்டர் சரவணனின் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

நடிகரும், இயக்குநருமான சரவண சக்தியின் ‘அகிலன்’ படத்தில் நடித்து வரும் டாக்டர் சரவணனிடம், இயக்குநர் சரவண சக்தி கேட்டுக்கொண்டதையடுத்து, சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் டாக்டர் சரவணன், தனது மருத்துவமனையில் தவசியை அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்.

நோய் காரணமாக அவர் தலைமுடி முழுவதும் உதிர்ந்து ஆளே அடையாளம் தெரியாமல் காணப்படுகிறார்.

தவசியின் மருத்துவ செலவுக்கு நடிகர் ரஜினிகாந்த், பெரும் தொகையை அளித்திருப்பதோடு, தவசியின் உடல் நலம் குறித்து தனது அலுவலக ஊழியர்கள் மூலம் விசாரித்து தெரிந்து கொண்டார்.

சிகிச்சையின் பலனாக தவசியின் உடல் நலம் கொஞ்சம் தேறியுள்ளது தவசிக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்துள்ள நடிகர் விஜய் சேதுபதி, அவரை நேரில் சந்தித்து உடல் நலம் விசாரிக்க திட்டமிட்டிருந்தார்.

ஆனால் ‘லாபம்’ ஷுட்டிங்கில் பிசியாக இருப்பதால், நடிகர் சவுந்தர ராஜா என்பவரிடம் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்து அனுப்பியுள்ளார்.

விஜய் சேதுபதி அளித்த பணத்தை நேற்று தவசியிடம் கொடுத்த சவுந்தரராஜா, “இப்போது தவசி பேசுகிறார். தேவைப்பட்டால் அவருக்கு ஆபரேஷன் நடத்த டாக்டர்கள் முடிவு செய்துள்ளனர்” என்றார்.

– பா. பாரதி