சென்னை: நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் ரஜினிகாந்த் யாருக்கும் ஆதரவு அளிக்க மாட்டார் என்று ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் தெரிவித்துள்ளார்.
அரசியலுக்குமுழுக்கு போட்டுள்ள ரஜினி தங்கள் கட்சிக்கு ஆதரவு தர வேண்டும் என அரசியல் கட்சித்தலைவர்கள் ஆளாளுக்கு பேசி வருகின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக நடிகர் கமல்ஹாசன்,தான் ரஜினியை சந்தித்து ஆதரவு கோரப்போவதாக கூறியிருந்தார். பல ஆண்டுகால நண்பர் என்பதால், அவர் தனக்கு ஆதரவு தருவார் என்றும் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில், தமிழருவி மணியன், அவரது பங்குக்கு ரஜினி முழுமையாக கட்சியில் இருந்து விலகவில்லை, தற்காலிகமாகத்தான் கூறியிருக்கிறார் என்று குழப்பத்தை உருவாக்கினார்.
இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் இன்று முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, இந்த சட்டமன்ற தேர்தலுக்கு ரஜினி நிச்சயமாக 100 சதவீதம் வர மாட்டார் என்றும், வரும் சட்டமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவும் அளிக்க மாட்டார் என்று தெரிவித்துள்ளதுடன், லதா ரஜினி கட்சி தொடங்குவதாக வரும் தகவல்கள் உண்மையில்லை என்று தெரிவித்துள்ளதுடன்,
அர்ஜுனமூர்த்தி கட்சி தொடங்கினால் அதற்கும், ரஜினி மக்கள் மன்றத்திற்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுக்கும் தொலைபேசி மூலம் சுதாகர் தகவல் தெரிவித்துள்ளதாகவும், ரஜினியின் முடிவை ஏற்று ரசிகர்கள் அனைவரும் உரிய முறையில் செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.