வேலூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் சசிகலாவை வரவேற்க 4 இடங்கள் காவல்துறை அனுமதி வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. சென்னையில், அவரை வரவேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், மற்ற மாவட்டங்களில் காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது.
பெங்களூரு ஜெயிலில் இருந்து  தண்டனை காலம் முடிந்து விடுதலையாகியுள்ள சசிகலா 8ந்தேதிஅன்று அங்கிருந்து சென்னை திரும்புகிறார். அவரது வருகையை பிரமாண்டப்படுத்த கோடிக்கணக்கான ரூபாயை அள்ளி வீசி வருகிறது, சசிகலா உறவினராக டிடிவி தினகரனின்  அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம். சசிகலாவை வரவேற்க பிரமாண்டமான ஏற்பாடுகளை டி.டி.வி.தினகரன் செய்துவருகிறார்.
சசிகலா தமிழகம் வரும் வழியான ஓசூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை மாவட்டங்களில் சசிகலாவுக்கு அமமுக சார்பில் பிரம்மாண்டமான வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்ட வருகிறது. இதற்காக பணம் தண்ணீராக இறைக்கப்பட்டு வருகிறது.
சசிகலாவுடன்  சுமார் 2ஆயிரம் கார்களும் பவனி வரவும், அவரது கார் மீது  ஹெலிகாப்டர் மூலம்  மலர் தூவவும், ஜெயா டிவியில் நேரடி ஒளிபரப்பு செய்யவும் திட்டமிடப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
சசிகலாவை வரவேற்க சாலை முழுவதும்பேனர்கள் வைக்கவும், வரவேற்பு அளிக்கவும், ஓசூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை அமமுகவினர் காவல்துறையில் அனுமதி கோரி மனு செய்துள்ளனர்.
சென்னையில், சசிகலா பேரணி மற்றும் வரவேற்புக்கு காவல்துறை அனுமதி மறுத்து உள்ளது. ஆனால், மற்ற மாவட்டங்களில் அனுமதி வழங்கப்பட்டுஉள்ளது.  அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 இடங்களில் சசிகலாவுக்கு வரவேற்பு அளிக்க காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது.
இதற்கிடையில்,  வேலூர் மாவட்டம், குடியாத்தம் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ ஜெயந்தி பத்மநாபன், ‘சசிகலா தமிழகம் வருவதை முன்னிட்டு, மாதனூர் அடுத்த கூத்தம்பாக்கத்தில் வரவேற்பு அளிக்கவுள்ளேன். அப்போது தனியார் வாடகை ஹெலிகாப்டர் மூலம் பூக்கள் தூவி வரவேற்பு அளிக்க உள்ளதாகவும் அதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று மனு கொடுத்துள்ளார். அவரது மனுவுக்கு இதுவரை அனுமதி வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.
சசிகலாவை வருகையை பிரமாண்டமாக அமமுகவினர் கொண்டாடுவது தமிழக மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மக்களின் சொத்தை அபகரித்து சிறைக்குச் சென்ற சசிகலா, தண்டனை முடிந்துதானே வெளியே வருகிறார். அவருக்கு ஏன் இந்த வரவேற்பு என்று ஆதங்கம் தெரிவித்து உள்ளனர்.
தமிழக மக்களிடம் கொள்ளையடித்த  கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்து காரணமாகவே, அவரது வரவேற்பை கோடிக்கணக்கான ரூபாய் செலவில் நடத்தப்படுவதாகவும் சமூக வலைதளங்களில் குற்றம் சாட்டப்படுகிறது.