ரஜினி – ஷ்யாம்

“ரஜினி எந்த விஷயமும் தெரியாமல், போராட்டக்காரர்களுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்” என்று பத்திரிகையாளர் ஷ்யாம் தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், ஐ.பி.எல். போட்டியை சென்னையில் நடத்தக்கூடாது என்று கோரியும் நேற்று பல்வேறு அமைப்புகள் சென்னையில் போராட்டம் நடத்தின. இதில் கூட்டத்தினரை கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் காவல்துறையைச் சேர்ந்த காவலரை தாக்கிய சம்பவம் நடந்தது.

இந்தக் காட்சியை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ரஜினி, “சீருடை அணிந்த காவலர்களை தாக்குபவர்களைத் தண்டிக்க கடுமையான சட்டங்கள் இயற்ற வேண்டும்” என்று பதிவிட்டார்.

இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துவருகிறார்கள்.

இந்த நிலையில் பத்திரிகையாளர் ரஜினி, “நேற்று ரஜினி எந்த தொலைக்காட்சியும் பார்க்கவில்லை என்று தெரிகிறது. பார்த்திருந்தால் எத்தனை பொதுமக்கள் காவல்துறையினரால் தாக்கப்பட்டனர், எத்தனை பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள் என்பதை அறிந்திருப்பார். அவரது படம் போட்ட பேட்ஜ் அணிந்த ரஜினி மக்கள் மன்றத்தினரும் ஐ.பி.எல். போட்டியை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

நேற்று மூன்று மணி முதல் எத்தனையோ காட்சிகள் தொ.கா.வில் வந்தது. அவற்றில் கவசம் அணிந்த காவலர்கள் போராட்டக்காரர்களை தாக்கிய வீடியோக்கள்தான்.

ஒரு துக்க நேரத்தில் ஒலி பெருக்கி, விழாக்களை தவிர்ப்பது தமிழர் பண்பாடு. அதே போலத்தான் ஐ.பி.எல். நடத்த வேண்டாம் என்று கோரிக்கை எழுந்தது. இந்த நிலையிலும் ஐ.பி.எல். நடத்த வேண்டுமா என்பதுதான் கேள்வி.

ரஜினியே, “ஐ.பி.எல். போட்டியை சென்னையில் நடத்துவது,  மக்களின் அதிருப்தியையும், கோபத்தையும் சம்பாதிக்க நேரிடும். வேண்டுமானால் கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடட்டும்” என்றார்.

ஆனால் இப்போது விஷயமே தெரியாமல் ரஜினி பேசியிருக்கிறார்” என்று தெரிவித்த ஷ்யாம், “ரஜினியின் உண்மையான திட்டம் பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்திப்பதுதான். அது இந்த கண்டனத்தின் மூலம் வெளிப்படையாக தெரிந்துவிட்டது” என்றார்.