சென்னை: சென்னை ஐபிஎல் போராட்டத்தின்போது காவலர் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு ரஜினிகாந்த் மிகக் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்ததுடன், சீருடையில் உள்ள காவலர்களை தாக்குவதைத் தடுக்கும் வகையில் கடும் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரது இந்த  ட்விட்டர் பதிவுக்கு சமூகவலைதளங்களில் ஒரு சிலர் ஆதரவு தெரிவித்திருக்கும் நிலையில், பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

“காவலர்களை பொதுமக்கள் தாக்கும் சம்பவம் எப்போதோ எங்கோ ஒன்றிரண்டுதான் நடக்கிறது. ஆனால் அப்பாவி பொதுமக்களை சீருடை அணிந்த தைரியத்தில் காவலர்கள்  தாக்குவது அன்றாடம் நடக்கிறது.

கிருஷ்ணகிரியில் ஒரு ஆசிரியையையும் அவர் கணவரையும் பொதுமக்கள் முன்னிலையில் காவலர்  கும்பலே கண்மூடித்தனமாகத் தாக்கியது. தங்களை எதிர்த்து பேசினார்கள் என்பதே அந்தத் தம்பதி மீது காவலர்களுக்கு ஆத்திரம் ஏற்பட காரணம்.

சமீபத்தில் திருச்சியில் வாகனத்தில் சென்ற கர்ப்பிணிப் பெண்ணை நடுரோட்டில் எட்டி உதைத்துக் கொன்றதும் இதே சீருடை அணிந்த காவலர்தான்.

சில நாட்களுக்கு முன்பு ஒரு தாயின் கண்முன்னே மகனை கொலைவெறித்தனமாக கட்டிவைத்து அடித்தது இதே காவல்துறைதான்.

ஜல்லிக்கட்டு கோரி, மெரினாவில் அறவழியில் நடந்த, உலகமே பெரும் ஆச்சரியமாக பார்த்த  போராட்டத்தை வன்முறைக் களமாக மாற்றியதும், அந்த போராட்ட மக்களுக்கு ஆதரவளித்த மீனவர் குப்பத்தையும் மீன் கடைகளையும் தீயிட்டுக் கொளுத்தியதும் இதே சீருடை அணிந்த காவலர்கள்தான்.

ஏழை மக்களின் வாழ்வாதாரமாக இருந்த ஆட்டோக்களைக் கூட இதே சீருடை காவலர்கள்தான் கொளுத்தினர்.

காவல்துறையின் இந்த எல்லா அக்கிரமங்களுக்கும் கைவசம் வீடியோ ஆதாரங்கள் உள்ளன. கதிராமங்கலம், நெடுவாசல், இடிந்தகரை என எங்கெல்லாம் தங்கள் உரிமைக்காக அற வழியில் போராடினார்களோ அங்கெல்லாம் அராஜகமாக காவல்துறை நடந்து போராட்டத்தை  ஒடுக்க முனைந்தது.

காவல் நிலையத்திலும் பொதுவாக நியாயமானவர்களுக்கு நியாயம் கிடைப்பதில்லை. லாக்அப் தாக்குதல், மரணங்கள் தொடர்கின்றன.

எண்கவுண்ட்டர் என்ற பெயரில் சீருடை அணிந்த காவல்துறையே கொலை செய்கிறது.

இதையெல்லாம் தட்டிக்கேட்காத ரஜினி இப்போது காவல்துறைக்கு ஆதரவாக பதிவிடுகிறார்” என்று நெட்டிசன்கள் பலரும் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

மேலும், “காவலர்களைத் தாக்குவதாக இவரே பல படங்களில் நடித்திருக்கிறார். ஆக காவலர்களைத் தாக்க இவரே வழிகாட்சியாக இருந்திருக்கிறார்.

அது மட்டுமல்ல தனக்கு மிகப்படித்தவர்கள் என்று பால்தாக்கரவையும், வாட்டாள் நாகராஜையும் கூறினார் ரஜினி. இந்த இருவருமே காவல்துறையை மதிப்பவர்களா” என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.