தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்: அறிவித்தபடி டிசம்பர் 31ந்தேதி கட்சியை அறிவிப்பாரா ரஜினி…..

Must read

சென்னை: ரஜினி நடித்து வந்த அண்ணாத்த படக்குழுவினர் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதால், நடிகர் ரஜினி தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக, அவர் ஏற்கனவே அறிவித்தபடி, அரசியல் கட்சி தொடர்பான அறிவிப்பு வெளியாகுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில், இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் , ரஜினி நடிப்பில் உருவாகி வருகிறது  ‘அண்ணாத்த’ படம். இந்த  படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் ஐதராபாத்தில் இருக்கும் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.  கொரோனா தொற்று உள்பட சில பிரச்னைகளால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த  படப்பிடிப்பு கடந்த 14ம் தேதி முதல் மீண்டும் தொடர்ந்து வருகிறது.

இதற்கிடையில், ரஜினி, தமிழக அரசியலில் ஈடுபடுப்போவதாக அறிவித்ததுடன், டிசம்பர் 31ந்தேதி கட்சிக்குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன் என்றும்,  அண்ணாத்த படத்தை விரைவில் முடித்துவிட்டு, ஜனவரியில் கட்சி தொடங்கப்படும் என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து, அண்ணாத்த பட ஷூட்டிங்கில் பங்கேற்று வந்தார். இந்த நிலையில், படக்குழுவினர் பலர் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், படப்பிடிப்பில்  பங்கேற்ற 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து,  படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், படப்பிடிப்பில் கலந்துகொண்ட அனைவருக்கும் தொற்று சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, ரஜினிக்கும் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், ஆனால், சோதனை முடிவு நெகடிவ் என்று வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இருந்தாலும், அவர்  கொரோனா நெறிமுறைகளின்படி தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

பொதுவாக ஒருவருக்கு  கொரோனா உறுதி செய்யப்பட்டால் உடன் இருப்பவர்களும் குறைந்தது 7 நாள் முதல் 14 வரை தனிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கொரோனா நெறிமுறைகள் உள்ளது. இந்த நிலையில், தற்போது தனிமைப்படுத்தப்பட்டு உள்ள  ரஜினி ஏற்கனவே அறிவித்தபடி, டிசம்பர் 31ந்தேதி கட்சியை அறிவிப்பாரா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

ஏற்கனவே சீறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள ரஜினி மேலும் சில நோய்களால் பாதிக்கப்பட்டு உள்ளார். அதனால்தான், அவர் கட்சி தொடங்குவதை தவிர்த்து வந்தார். ஆனால், அவரது ரசிகர்களின் வற்புறுத்தல், பாஜகவின் நெருக்குதல் காரணமாக, அவர் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது அவர்  தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக வெளியாகி உள்ள தகவல், அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதுபோல, அண்ணாத்த படப்பிடிப்பில் அடுத்தடுத்த சிக்கல் நீடிக்கும் சூழலில், படப்பிடிப்பு மீண்டும் எப்போது தொடங்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

More articles

Latest article