நெட்டிசன்:

ஏழுமலை வெங்கடேசன் அவர்களின் முகநூல் பதிவு:

’என் பாடல்களை எனக்கு காப்புரிமை தராமல் நீங்கள் மேடைக்கச்சேரிகளில் பாடக்கூடாது’’

இப்படியொரு வழக்கறிஞர் நோட்டீஸ் தங்கள் தரப்புக்கு இசையமைப்பாளர் இளையராஜா தரப்பிலிருந்து வந்திருப்பதாக எஸ்.பி.பாலசுப்ரமணியம் தகவல் வெளியிட்டபோது எல்லோருமே அதிர்ந்துபோனார்கள்.

காப்புரிமை சட்டத்தின்படி இளையராஜா பக்கம் நியாயம் இருப்பது விஷயத்தை ஆழமாக உணர்ந்தவர்களுக்கு தெரியும். அவர், பெரிய நிறுவனங்களை எதிர்த்தோ, தொழில் ரீதியாக தன்அறிவுசார் உரிமையை பயன்படுத்தத்துடிக்கும் சம்மந்தமே இல்லாத தரப்பிற்கு எதிர்த்தோ வாள் சுற்றியிருந்தால் நிச்சயம் அவருக்கு ஆதரவாக ஊரே ஒன்று திரண்டு எதிர் தரப்பை வெளுத்திருக்கும்.

ஆனால் இங்கே அவர் கையை நீட்டி கடிவாளம் போட்டது 50 ஆண்டுகால நண்பரான இன்னொரு இசை மேதைக்கு. தொழில் ரீதியில் எடுத்துக்கொண்டால், நியாயம் என்பது மீண்டும் இளைராஜா பக்கமே. இங்கு பிரச்சினையே, இளையராஜா சூழலை கையாண்ட விதம்தான்.

அமெரிக்காவில் எஸ்பிபியின் நிகழ்ச்சிகள் முடிவாகிறது என தெரிந்தவுடனேயே, ‘அமெரிக்காவில் என்பாடல்களை மேடைநிகழ்ச்சிகளில் பாட யாரும் என்னிடம் அனுமதிவாங்கவில்லை..ஆகையால் உஷராக இருக்கவேண்டிய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் டிக்கெட் வாங்கும் ரசிகர்களின் பொறுப்பு’ என்று நாசூக்காக சொல்லியிருக்கலாம்..

இல்லாவிட்டால் நிகழ்ச்சிகள் முடிந்தபின்னர், ‘என் பாடல்களை பாடி இத்தனை கோடி சம்பாதித்துள்ளனர். ஆனால் என் காப்புரிமைக்கான பங்கை தராமல் உயிர் நண்பர் எஸ்பிபி போன்றவர்களே ஏமாற்றுவது நியாயமா என்று கேட்டிருந்தால், எஸ்பிபியைத்தான் எல்லோரும் திட்டியிருப்பார்கள். பணத்தை எடுத்து ரோஷத்தோடு வீசவேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டிருக்கலாம்.

ஆனால் அதைவிட்டுவிட்டு, கடைசி நேரத்தில் செக்வைத்து அமெரிக்காவில் ரசிகர்கள்முன் எஸ்பிபி அவமானப்படும் நிலையை உருவாக்கிய விதம்தான் பிரச்சினையை வேறு தளத்திற்கு மாற்றிவிட்டது.

கையறு கட்டத்திற்குபோன எஸ்பிபி, நான் பாடிய நாற்பதாயிரம் பாடல்களில் இளையராஜாவின் இரண்டாயிரத்தை தவிர மற்ற பாடல்களை பாடுகிறேன்… இளையராஜாவை தொடமாட்டேன் என்று சொல்லிவிட்டார்.

கோடிக்கணக்கான ரசிகர்களை உலகம் முழுவதிலுமிருந்து பெற்றுள்ள இரு துருவங்களுக்கும் இடையே எவ்வளவு பகைமை உருவாக்கிவிட்டது இந்த விஷயம். இதனை இசையமைப்பாளர் இளையராஜா அழகாக தவிர்த்திருக்கலாம். ஆனால் நெருக்கடி கொடுத்ததற்கு பின்னால் உள்ள விஷயம், நண்பன் தலைகுனியும் நேரத்திலும் நட்பை கழட்டிவிட துணிந்துவிட்டது..

அடுத்து, ரஜினி விஷயம். இலங்கை பயணத்தை சொந்தக்காரணங்களால் ரத்து செய்கிறேன் என்று சொல்லிவிட்டுபோயிருந்தால் தொல்லையில்லை.. ஏன் ரத்து என்பதற்கு, மூன்று பக்க அறிக்கை?

‘’நீங்கள் சொல்வது நியாயம் இல்லை என்றாலும் இப்போதைக்கு ஏற்றுக்கொண்டு ரத்து செய்கிறேன்.. ஆனால் மீண்டும் போகும்போது என்னை இப்படி தடுக்காதீர்கள்’’ என்ன தெளிவு… அடேங்கப்பா..

சரி விஷயத்திற்கு வருவோம். எட்டு ஆண்டுகளுக்கு முன் இலங்கை இனப்படுகொலை உலகை உலுக்கியது. தமிழகமே கொந்தளித்தது. அப்போது ஒரேயொருமுறை நிகழ்ச்சி ஒன்றில் ராஜபக்சேவை தூக்கிப்போட்டு மிதிக்கவேண்டாமா என்று ரஜினி ஆவேசமாக பேசினார்..

அதன் பிறகு பேசவில்லை. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டபோதும் இவர் கண்டிக்கவில்லை..

இதற்காக நாம் ரஜினியை குறை சொல்லமுடியாது. அவர் ஒரு நடிகர்..எல்லா நேரத்திலும் எல்லா பிரச்சினைக்கும் கருத்து கந்தசாமியாக மாறியே ஆகவேண்டும் என்ற கட்டாயம் கிடையாது..

ஆனாலும் அரசியலுக்கு வருவேன், வரமாட்டேன் என்று குழப்புவது, மோடி போன்றவர்களை வீட்டுக்கு வரவழைத்து அரசியல் செல்வாக்கை உலகத்திற்கு காட்டுவது.. இதைப்பற்றியெல்லாம் பேச ஆரம்பித்தால் எங்கோ போய்விடும், வேண்டாம்

இவ்வளவு நாள் கழித்து திடீர் ஞானோதயம் வந்த கதையாய், இலங்கைக்கு ரஜினி பயணம். அந்த நாட்டு அரசு அழைத்ததா? இல்லை. துயரத்தில் இருக்கும் தமிழர்கள் அழைத்தார்களா? அதுவும் இல்லை. தன் சொந்த விருப்பத்தின்பேரில் சொந்த பணத்தில் செல்ல விரும்பினாரா? அய்யய்யோ அதுவும் இல்லை.

லைகா நிறுவன உரிமையாளர் நடத்தும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள போகிறார்…யார் இந்த லைகா நிறுவனம்.. ரஜினி நடித்து ஷங்கர் இயக்கும் பல நூறுகோடி ரூபாய் பட்ஜெட் கொண்ட எந்திரன் படத்தின் இரண்டாம் பாக தயாரிப்பாளர்.

ஆக தனது முதலாளி கூப்பிடுகிறார். தட்டமுடியாத சூழல் ஏற்பட்டிருக்கும்.. இவர் போகிறார்.. இதில் எங்கே வருகிறது இலங்கை தமிழர் பாசம்? புனிதப்போர், மாவீரர்கள் வாழ்ந்த பூமி,.. மண்ணாங்கட்டி சாமி என்பதெல்லாம்…

தமிழக மீனவர்கள் பிரச்சினைபற்றி இலங்கை அதிபரிடம் பேச நேரம் கேட்டிருந்தாராம்..அண்மையில் ஒரு ராமேஸ்வரம் மீனவ இளைஞன் சுட்டுக்கொல்லப்பட்டு தமிழ்நாடே மத்திய அரசின் சட்டையை பிடித்து உலுக்கியது..அப்போது ரஜினி ஏதாவது பேசிவிட்டு இப்போது இதை சொல்லியிருந்தால்கூட ஒரு அடிப்படை நேர்மை இருந்திருக்கும்..

உலகிலேயே அண்டை நாட்டு மீனவர்களை நூற்றுக்க ணக்கில் சுட்டுக்கொன்றிருக்கும் ஒரே நாடு இலங்கை. அதன் அதிபரிம் பேச இவர் போகப்போகிறாராம் அதை தடுக்கிறார்களாம். இவர் போய் பேசியவுடன் இலங்கை வழிக்கு வந்துவிடும் என்பதை எந்த கூமுட்டையாவது நம்புவானா?

ரஜினி பேசவேண்டிய இடம் நம்ம மத்திய அரசிடம். அவருக்கு நெருங்கிய நண்பரான பிரதமரான மோடியிடம்.. அதைவிட்டுவிட்டு என்னென்னமோ சொல்கிறார்.

மக்களை மகிழ்விக்கும் கலைஞனாக மட்டுமே உங்கள் வேலையை பார்த்துக்கொண்டு போனால் உங்களை யார் என்ன கேள்வி கேட்கப்போகிறார்கள்..

திடீர் திடீரென்று வந்து அரசியல் பேசி ஓடிவிடுவது, அரசியல், சினிமா இரண்டையும் தேவையில்லாமல் கலக்கப்பார்ப்பது. படம் வெளியாகும் நேரங்களில் மட்டும் பொதுவெளியில் பரபரப்பை உண்டுபண்ணுவது, விமர்சனம் எழுந்தால் நொந்துபோய் புலம்புவது..எத்தனை காலத்திற்கு இதையே செய்யப்போகிறார் என்றே தெரியவில்லை..

ரஜினியை போன்ற உலக அளவில் புகழ்பெற்ற கலைஞர்கள், நாடுகளுக்கான எல்லைகளுக்கு அப்பாற்பட்டவர்கள். கலாச்சார தூதுவர்கள். அவர்கள் நினைத்தால் பல பெரிய பிரச்சினைகளின் தீர்வுக்காண ஆரம்ப புள்ளியாக அமைந்து வழிகாட்டலாம். ஆனால் இதுவரை ரஜினி அந்த மாதிரி எந்த விஷயத்திலும் செய்ததில்லை..

1996ல் ஜெயலலிதா ஆட்சிக்கு எதிராக குரல் கொடுத்து வெற்றிபெற்றது ஒன்றையே அவர் இன்னமும் நினைத்துக்கொண்டிருக்கிறார். பாமகவுக்கு எதிராக தேர்தல் நேரத்தில் ஆறு மக்களவை தொகுதிகளில் மட்டும் பொங்கி தனது பேச்சு எடுபடாமல் போனது போன்ற சம்பவங்கள்தான் அதன் பின் அதிகம் நடந்துள்ளன என்பதை ரஜினி மறந்துவிட்டார்.

சரியான நேரத்தில் சரியான விஷயத்திற்கு நேர்மையோடு குரல் கொடுக்க முடிந்தால் பொதுவெளிக்கு வருவது நல்லது.. இல்லாவிட்டால் தாம் நடிக்கும் படத்தை மட்டும்தான் வெளியேவிடவேண்டும்..

கோடிக்கணக்கான ரசிகர்களை பின்புலமாக வைத்துள்ள திரை ஜாம்பவான்கள். ஒன்றை செய்வதற்கு முன் பத்து முறை யோசிப்பது நல்லது..சின்ன சறுக்கலுக்குக்கூட எதிர் வினை வராமல் போகாது..பிரபலத்திற்கான விலை அது..