யாழ்ப்பாணம் செல்கிறார் ரஜினி! பாஜக அரசியலா? 2.0 பட பிரமோஷனா?

ஜினி நடிக்கும் 2.0 படத்தை தயாரிப்பது லைக்கா திரைப்பட நிறுவனம். இந்த நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளையின் சார்பில் இலங்கையின் வவுனியாவில் 150 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றை ஈழத்தமிழர்க்கு அளிக்கும் நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 9ம் தேதி யாழ்ப்பாணத்தில் நடக்க இருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினியும் கலந்துகொள்ள இருக்கிறார்.

இதற்கு இருவித காரணங்கள் சொல்லப்படுகின்றன.

“பொது விசயங்கள் எது குறித்தும் கருத்துக்கூட தெரிவிக்காமல் ஒதுங்கியிருக்கும் மனோபாவம் கொண்டவர் ரஜினி.  அவரை நோக்கிக் கேள்விக்கணைகள் எழும்போது மட்டும்தான், காவிரி விவகாரம் பற்றிகூட பேசுவார். மற்றபடி தனது திரைத்துறை சார்ந்த விசயங்களில்கூட கருத்து தெரிவிக்கமாட்டார்.

அப்படிப்பட்டவர் அநாதரவான மக்களுக்கு வீடு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார் என்பதை சாதாரணமாக நினைக்க முடியாது. அதுவும் யாழ்ப்பாணம் செல்கிறார் என்பது மிக ஆச்சரியமான விசயம்.

இதற்கு பின்னால் மத்திய பாஜக அரசு இருக்கக்கூடும்.

மத்திய பாஜக அரசின் அதிதீவிர ஆதரவாளர் ரஜினி என்பது அனைவருக்கும் தெரியும். ஜல்லிக்கட்டு விவகாரம் தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்திய போதுகூட அமைதியாகவே ரஜினி இருந்தார். ஒரு கட்டத்தில் இவர் ஏன் கருத்து சொல்லவில்லை என்று சமூகவலைதளங்களில் பலரும் கேள்வி கேட்க ஆரம்பித்தவுடன் ஜல்லிக்கட்டு குறித்து பேசினார். ஆனால் மத்திய பாஜக அரசு, “நோட்டு செல்லாது” அறிவிப்பை வெளியிட்ட உடனேயே, “புதிய பாரதம் பிறந்தது” என்று பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டினார்.

ஆகவே ரஜினியை  தமிழக பாஜகவின் முகமாக ஆக்க வேண்டும் என்று அக் கட்சி ஆசைப்படுகிறது.

யாழ்ப்பாண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதன் மூலம், ரஜினிக்கு முழுமையான தமிழ் முத்திரை விழும். அழரை கன்னடர் என்று விமர்சிப்பவர்கள், பொது நலன் சார்ந்த விசயங்களில் அக்கறை அற்றவர் என்று விமர்சிப்பவர்கள் வாயை இதன் மூலம் மூடலாம். அதன் பிறகு அவரை  தமிழக பாஜகவின் முக்கிய பொறுப்பில் அமர்த்தலாம் என்று அக்கட்சி தலைமை நினைத்திருக்கிறது” என்று ஒரு பேச்சு அடிபடுகிறது.

ஆனால் இன்னொரு புறம், “ச்சீ.. ச்சீ…  ரஜினி படத்தைவிட மேற்கண்ட காரணம் ஓவர் பில்ட் அப் ஆக இருக்கிறது.

தற்போது ரஜினி நடித்துவரும் 2.0 படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனம்தான் இலங்கையில் வீடு கட்டித்தருகிறது. அந்த நிகழ்ச்சியில் ரஜினி கலந்துகொள்வது என்பது 2.0 படத்தின் பிரமோஷன்தான்.

மற்றபடி அரசியல்வாதிகள் வலையில் ரஜினி சிக்கவே மாட்டார்” என்றும் சொல்கிறார்கள்.

இன்னொரு பக்கம்,”ரஜினி எதைச் செய்தாலும், அதில் உள்ளர்த்தம் கற்பிக்க வேண்டுமா. உண்மையிலேயே ஈழத்தமிழர் மீது அக்கறை கொண்டு செல்லக்கூடாதா? ஏன் இப்படி யோசிக்கிறார்கள்” என்ற குரல், ரஜினி ரசிகர்களிடமிருந்து எழுகிறது.

 


English Summary
Rajini go to jaffna: what is the reason?