திரைப்பாடல் உரிமை தயாரிப்பாளருக்கே!:  நடிகர் ராதாரவி ஸ்பெஷல் பேட்டி

Must read

 

 

ராதாரவி

மீபத்தில் இசையமைப்பாளர் இளையராஜா தனது இசையமைப்பில் உருவான பாடல்களை தனது அனுமதி இன்றி பாடக்கூடாது என பாடகர் எஸ்.பி.பி.க்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். இதையடுத்து இனி  இளையராஜா இசையமைத்த பாடல்களை பாடப்போவதில்லை என்று எஸ்பி.பி. அறிவித்தார்.

இப்போது. இளையராஜா நோட்டீஸ் அனுப்பியது தவறு என்றும், சரி என்றும் சமூகவலைதளங்களில் வாதப்பிரதிவாதங்கள் நடக்கின்றன. ஊடகங்களிலும் இது குறித்த விவாதங்கள் நடந்துவருகின்றன.

இளையராஜா செய்தது தவறு என அவரது இளைய சகோதரர் கங்கை அமரன் கருத்து தெரிவித்தார். திரைப்பட இயக்குநர், இசையமைப்பாளர், பாடலாசிரயர் என பன்முகம் கொண்டவர் இவர்.

மற்றபடி திரைத்துறையில் இருந்து வேறு எவரும் இது குறித்து கருத்து தெரிவிக்கவில்லை..

இந்த நிலையில்  patrikai.com இதழின் சார்பில் நடிகர் ராதாரவியை தொடர்புகொண்டு, இந்த விவகாரம் குறித்து கேட்டோம்.

இதற்கு ராதாரவி “தனது பாடல்களை தனது அனுமதி இன்றி பாடக்கூடாது என இளையராஜா நினைத்தால்  அதை நேரடியாக எஸ்.பி.பியிடம் சொல்லியிருக்கலாம். ஏன் என்றால் அவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள். பேசித்தீர்த்திருக்கலாம்” என்றவர் தொடர்ந்து பேச ஆரம்பித்தார்:

“ஒரு திரைப்படத்தை உருவாக்குபவர் தயாரிப்பாளர்தான். அவர்தான் முதலீடு செய்கிறார்.  கதாசிரியர், வசனகர்த்தா, நடிகர், நடிகைகள், ஒளிப்பதிவாளர், எடிட்டர், கலை இயக்குநர்,  இயக்குனர் ஆகியோரில் இருந்து லைட்மேன் வரைக்கும் புக் செய்கிறார்.

இவர்கள் அனைவரின் உழைப்புக்கும், ஆற்றலுக்கும் தயாரிப்பாளர் சம்பளம் கொடுக்கிறார்.

படத்துக்கு பூஜை போடுதில் இருந்து அது சென்சார் முடிந்து திரைக்கு வருவது வரை தயாரிப்பாளர்தான் எல்லாமும் செய்கிறார்.

இளையராஜா – எஸ்.பி.பி.

அப்படித்தான், இசை அமைப்பாளருக்கு வாய்ப்பு கொடுத்து அவரது இசைக் கோர்ப்புக்கு உரிய ஊதியம் கொடுக்கிறார் தயாரிப்பாளர்.

அந்த இசையமைப்பாளர் பல இசைக் கலைஞர்களின் உழைப்பைப் பயன்படுத்தி, தனது இசைக் கோர்ப்பு செய்த பாடலுக்கு ஒலி வடிவம் அளிக்கிறார். அந்த இசைக் கலைஞர்களுக்கான சன்மானத்தையும் தயாரிப்பாளர் தான் அளிக்கிறார். பாடலாசிரியிருக்கும், தயாரிப்பாளர் பணத்தில் இருந்து கொடுக்கிறார்.

இந்த நிலையில், பாடலின் உரிமை இசை அமைப்பாளருக்கே சொந்தம் என்பது எப்படி சரியாகும்?  தயாரிப்பாளருக்குத்தான் முழு உரிமை இருக்க வேண்டும்” என்றார் ராதாரவி.

அவரிடம், ““மேற்கத்திய நாடுகளில் இசையமைப்பாளர்களுக்குத்தான் உரிமை இருக்கிறது. மைக்கேல் ஜாக்சன் இசை அமைத்த பாடல்களுக்கு ஆல்பங்களுக்கு அவருக்குத்தான் உரிமை இருக்கிறது என்று சிலர் சொல்கிறார்களே..” என்றோம்.

அதற்கு ராதாரவி, “ஒரு விசயத்தை இவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். மைக்கேல்ஜாக்சன் உட்பட மேற்கத்திய இசையமைப்பாளர்கள் திரைப்படங்களில், இசை அமைப்பது இல்லை. தயாரிப்பாளர்களிடம் பணம் வாங்குவதில்லை.

மைக்கேல் ஜாக்சன் போன்றவர்கள், தங்களது பாடல் ஆல்பத்தை உருவாக்க, தாங்களே முதலீடு செய்கிறார்கள். அதாவது தாங்களே பணம் கொடுத்து இசைக்கருவி மீட்டுபவர்களை பணிக்கு அமர்த்துகிறார்கள். தாங்களே பாடலாசிரியருக்கு பணம் கொடுத்து பாடல் எழுத வைக்கிறார்கள். அந்த பாடலை ஒலிவடிவத்தில் கொண்டுவர ஸ்டூடியோவை தங்கள் பணத்திலேயே புக் செய்கிறார்கள்.

ஆகவே அவர்களுக்கே பாடல் ஆல்பத்துக்கு முழு உரிமை என்பது சரியாக இருக்கும்.

ஆனால் திரைப்பட பாடல் என்பது அப்படி இல்லையே… ஆகவே பாடல் உட்பட படம் முழுதும் உருவாக காரணமாக இருக்கும் தயாரிப்பாளருக்கே அத்தனைஉரிமையும் உண்டு என்பதே நியாயம்!” என்று சொல்லி முடித்தார் நடிகரும், தயாரிப்பாளருமான ராதாரவி.

More articles

10 COMMENTS

Latest article