(முன் குறிப்பு: இக்கட்டுரையில் வரும் கருத்துக்கள் முழுதும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துக்கள். இது குறித்த எதிர்வினைகள் வரவேற்கப்படுகின்றன. – ஆசிரியர்)

 

‘எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்தினால் தமிழகம் சுடுகாடாகும்’ –

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களைப் பார்த்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினிகாந்த் கொடுத்த வாய்ஸ் இது. ஏற்கனவே, 1996ல், மீண்டும் இந்த ஆட்சி வந்தால் தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்று ரஜினிகாந்த் சொன்ன, ‘வாய்ஸ்’ தமிழக அரசியலில் ஏற்படுத்திய வீச்சு, ரஜினியின் தற்போதைய கருத்திற்கும் கிடைத்திருக்க வேண்டும்.

ஆனால், அப்படி இன்றி அரசியல் பிரமுகர்கள் பலரும் ரஜினிக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

ஏன் இப்படி?

அதிமுக ஆட்சிக்கு எதிராக 1996ல் அவர் கருத்து தெரிவித்தபோது, அவர் அரசியலுக்கு வருவதாக சொல்லவில்லை. அதனால், அவரது ‘வாய்ஸ்’ அதிமுக தவிர அனைத்துக் கட்சிகளுக்கும் இனித்தது. இப்போது அவர் அரசியல் தலைவராக பரிணமிக்கத் தொடங்கியுள்ளதால், அவரது ‘வாய்ஸ்’ பலத்த விமர்சனத்திற்குள்ளாக்கி இருக்கிறது.

ரஜினியின் அரசியல் பிரவேசம் என்பது தமிழக அரசியலில் ஏற்படுத்தவுள்ள தாக்கத்தை உணர்ந்து, விமர்சனக் கணைகளால் அவர் குறி வைக்கப்படுகிறார்.

இதை இன்னும் விரிவாகவே பார்ப்போம்.

தூத்துக்குடி பயணத்தை தொடங்கும் முன் சென்னையில் அவரது வீட்டின் முன் பத்திரிகையாளர் சந்திப்பு.

அதில் ஒரு கேள்வி.

‘தூத்துக்குடியில் நீங்கள் யாரைச் சந்திக்கப் போகிறீர்கள்?’

கொள்கை என்ன என்று கேட்டால் தலை சுற்றுகிறது என்று சொன்னதாக ரஜினியை விமர்சனம் செய்தவர்கள், இந்த கேள்வி எழுப்பிய நிருபரை, அவரது நிறுவனத்தை விமர்சனத்திற்குள்ளாக்க மாட்டார்கள்.

அதிமுக மீது திமுகவும், திமுக மீது அதிமுகவும் பழிபோடும் ‘ப்ளாஷ்பேக்’ அரசியல் வேண்டாம் என்ற தெளிவான, தீர்க்கமான பார்வை அவரது பேட்டியின் ஹைலைட் ஆக இருந்தது.

மருத்துவமனையில் நோயாளிகளைப் பார்க்கும்போது உணர்ச்சிவசப்பட்ட நிலையில் ரஜினி இருந்துள்ளார். மருத்துவமனையில் இருந்தபோது போலீஸாருக்கும், அரசுக்கு எதிராக ஆவேசமாக பேசிய – தனது தோழியை துப்பாக்கிச்சூட்டில் பலி கொடுத்த எவுலின் விக்டோரியா மற்றும் வினோதன்  கூறும்போது, ‘எல்லோருக்கும் ஆறுதல் கூற ரஜினி முயன்றார். ஆனால், அவரால் இயலவில்லை. கண்களில் கண்ணீர் வந்துவிட்டதால், அவரால் பேச முடியவில்லை. எங்களைத் தட்டிக் கொடுத்து உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று மட்டும் அக்கறையாகச் சொன்னார்’ என்றனர்.

இப்படி நோயாளிகளைப் பார்த்து வரும்போது, சந்தோஷ் ராஜ் என்ற இளைஞர் ‘நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்? இவ்வளவு நாட்களாக ஏன் வரவில்லை’ என்று கேட்டு அவமானப்படுத்தி உள்ளார்.

இது கோபத்தின் வெளிப்பாடு அல்ல. அருவருப்பின் உச்சம்.

1994ம் ஆண்டு முதல் 2018 மார்ச் வரை ஸ்டெர்லைட் ஆலை இயங்க எல்லாவிதமான அனுமதி கொடுத்த மத்திய (காங்கிரஸ் – பாஜக, மாநில (அதிமுக  – திமுக) அரசுகளையும், இவர்கள் அரசாள உதவிய தேமுதிக, மதிமுக, பாமக, தமாகா, கம்யூனிஸ்ட்கள் என அத்தனை கட்சியினரையும் பார்த்து சந்தோஷ் இந்த கேள்வியைக் கேட்டிருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். அதை விடுத்து உடல்நலம் விசாரிக்க வந்தவரை அவமதித்து, சீண்டி விடும் சின்னத்தனமான செயலுக்கு பின்னால் இருப்பவர்களை ரஜினியும் புரிந்து கொண்டார். தமிழ்நாடும் புரிந்து கொண்டுள்ளது.

ரஜினி திரைப்படத்துறையில் பன்மடங்கு சாதித்தவர். வயதில் மூத்தவர். பெரும் தலைவர்கள் பலருடன்  பழகியவர். அவரது அரசியலில் கருத்து வேறுபாடு இருக்கலாம். அவர் மீது வெறுப்பு கூட இருக்கலாம்.

ஆனால் பாதிக்கப்பட்டவர்களை நலம் விசாரிக்க வரும்போது  அவரது மகன் வயது இருக்கும் ஒருவர் ‘நீங்க யாரு’ என்று கேட்பது சரிதானா? தமிழர் பண்பாடு என்று முழங்கும் ஒருவர் கூட இச்செயலைக் கண்டித்தத்தாக தெரியவில்லையே!

ஏனென்றால், தங்களுக்குக் கிடைக்காத வரவேற்பு ரஜினிக்கு தூத்துக்குடியில் கிடைத்து விட்டதே என்று வயிற்றெரிச்சல்தான்.

“யார் நீங்க?” தருணம்

ரஜினி கருத்துக் கூறவில்லை என்றால், “ஏன் அமைதியாக இருக்கிறார்” என்ற கேள்வி…

கருத்து கூறினால், “ இப்போது தான் பேச நேரம் கிடைத்த்தா” என்றோ, “கூறிய கருத்து தவறு…” என்று சொல்ல வேண்டியது..

தூத்துக்குடி செல்லாவிட்டால், “ஏன் செல்லவில்லை” என்ற கேள்வி.

சென்ரால், “ஏன் இப்போது மட்டும் வந்தீர்கள்” என்று ஆள் வைத்து கேட்க வேண்டியது.

இதே போல, ரஜினி காலா படத்தின் ப்ரமோஷனுக்காகத் தான் இதை செய்கிறார் என்று சிலர் சொல்கிறார்கள். அவர் நினைத்தால் காலா குறித்து ஒரு பத்து நிமிட பேட்டி கொடுத்தால் போதும்.   உலகத் தமிழர்கள் அனைவரையும் சட்டென சேர்ந்துவிடும். தூத்துக்குடி சென்று, பாதிக்கப்பட்டவர்களைப் பார்த்து, நிதி உதவி அளித்து..  காலாவை விளம்பரப்படுத்த அவசியமில்லை.

நீங்கள் கேள்வி கேட்க வேண்டும் என்றால், தூத்துக்குடியில் கலவரத்தில் ஈடுபட தூண்டியவர்களை கேளுங்கள்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இறுதி நாளில் விஷக்கிருமிகள், சமுகவிரோதிகள் ஊடுருவியது போல, ஸ்டெர்லைட் போராட்டத்தின் போதும் விஷக்கிருமிகள் உடுருவி விட்டனர். அவர்கள் தான் போலீஸாரைத் தாக்கினர் என்பது ரஜினியின் ஸ்டேட்மெண்ட்.

‘அது உங்களுக்கு எப்படித் தெரியும்’ என்று கேட்கிறார் நிருபர்.

வாகனங்களுக்கு தீ வைத்தது, காவலர்களைத் தாக்கியது, ஊழியர் குடியிருப்பை சேதப்படுத்தியவர்கள் தான் சமூக விரோதிகள் என்பதை புரிந்து கொள்ள புலனாய்வு செய்ய வேண்டியதில்லையே. காவல்துறை வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில், காருக்கு தீ வைக்கும் இளைஞனின் செயல்பாட்டைப் பார்த்தாலே,   சமூகவிரோதிக்கும், சாதாரண மனிதனுக்குமான வித்தியாசத்தை தெரிந்து கொள்ளலாமே.

பத்திரிகையாளர் சந்திப்பில் ரஜினி

கடைசியாக, எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்தினால், தமிழகம் சுடுகாடாகும் என்ற கருத்தும் விமர்சனத்திற்குள்ளாக்கப்பட்டு இருக்கிறது.

போராட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதன் மூலம், தொழிலாளர்களுக்கு விரோதி என்ற முத்திரையை ரஜினி மேல் குத்தப் பார்க்கின்றனர்.

ஆனால், தான் சார்ந்த திரையுலகில் என்றும் பெப்சி அமைப்பின் தொழிலாளர்களுக்கு சாதகமாகவே ரஜினிகாந்த் இருந்துள்ளார். இன்னும் சொல்லப்போனால், தயாரிப்பாளர் சங்கத்திற்கும், பெப்சிக்கும் இடையே மோதல் உருவாகி படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு, தொழிலாளர்கள் வேலை இழந்த நிலையில், பெப்சிக்கு ஆதரவாக களமிறங்கியவர் ரஜினி. தயாரிப்பாளர் சங்க மிரட்டலையும் மீறி, தனது உழைப்பாளி படத்தின் படப்பிடிப்பை பெப்சி தொழிலாளர்களைக் கொண்டு நடத்தி, அவர்களின் நலன் காத்தவர்.

தங்களின் கோரிக்கைகளை, தேவைகளை அரசிற்கும், நிர்வாகத்திற்கும் கொண்டு செல்ல ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என பலவிதமான வடிவங்களில் போராட்டங்கள் முளைக்கின்றன. இந்த போராட்டங்கள் யாரின் கவனத்தைக் கவர வேண்டுமோ அவர்களது கவனத்தை ஈர்க்கும் வகையில் இருந்தால் மட்டுமே, அவை வெற்றி பெறும். போராட்ட கோரிக்கைக்கு தீர்வு கிடைக்கும். ஆனால், சமீபத்திய போராட்டங்கள் எதுவும் தீர்வை நோக்கிய போராட்டங்களாக இருப்பதில்லை.

அரசியல், பொருளாதாரம் உள்ளிட்ட  காரணங்களுக்காக தற்போது நடத்தப்படும் போராட்டங்கள் மக்களின் ஆதரவைப் பெறுவதற்கு பதிலாக வெறுப்பையே பெற்று வருகின்றன. சென்னை, கோவை போன்ற நகரங்களில் அடிக்கடி ஆர்ப்பாட்டங்களை நடத்தும் கட்சிகளின் பொறுப்பாளர்களைக் கேட்டுப்பார்த்தால், தலைக்கு எவ்வளவு ரூபாய் செலவு செய்ய வேண்டும் என முழு விபர பட்டியலே கொடுப்பார்கள்.

ஜல்லிக்கட்டு போன்று தன்னெழுச்சியாக நடக்கும் போராட்டங்கள் இதற்கு விதிவிலக்கு. 1994ல் இருந்து 2018 மார்ச் வரை ஸ்டெர்லைட் இயங்கியபோது ஏற்படாத மக்கள் எழுச்சி, இப்போது திடீரென ஏற்பட்டதின் பின்னணியும் விசாரிக்க வேண்டியதே. அதற்காக ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயக்க வேண்டும் என்ற கருத்துப்பிழையோடு இதனைப் புரிந்து கொள்ளக்கூடாது.

போராட்டங்களை ஒருங்கிணைப்பவர்கள், போராட்டத்திற்காக திரள்பவர்களை தங்கள் கட்டுக்குள் கொண்டு வரத் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஆளுமை பெற்ற தலைவர்கள் தலைமையேற்கும் போராட்டங்கள் வன்முறையில் முடிந்ததில்லை. கருணாநிதியோ, ஜெயலலிதா தலைமையேற்ற போராட்டங்கள் வன்முறையில் முடிந்ததில்லை.

தென் மாவட்டங்களைப் பொறுத்தவரை, ஜாதிக்கலவரம் போன்ற பதற்றமான சம்பவங்கள் அடிக்கடி நடந்ததால், அங்கு தொழில் வளர்ச்சி முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் பல பகுதிகளுக்கும், நாட்டின் பல பகுதிகளுக்கும் தென்மாவட்ட இளைஞர்கள் பயனிக்கும் அவல நிலை இன்றும் தொடர்கிறது. தென்மாவட்ட ஜாதி மோதல்கள் குறித்து ஆய்வு செய்த நீதிபதி ரத்னவேல் பாண்டியன் கமிட்டி, தொழில்வளத்தைப் பெருக்கி, இளைஞர்களுக்கு வேலை கொடுப்பதே இப்பிரச்சினைக்கு தீர்வு என்றார். ஆனால், அவரது பரிந்துரைக்கு பின்பும் தென்மாவட்டங்களில் தொழிற்சாலைகள் பெருகவில்லை. வேலை வாய்ப்புகள் அதிகரிக்கப்படவில்லை. ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு பின்பு, தென் மாவட்டங்களில் தொழில் தொடங்க நிறுவனங்கள் முன்வருமா என்ற பெரிய சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

போராட்டக்களங்கள் வன்முறையில் முடிவதும், வன்முறையில் அப்பாவிகள் பலியாவதும் தடுக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் ரஜினியின் பேச்சில் ஆழமாக எதிரொலித்துள்ளது.

மகாத்மா காந்தி

இந்த இடத்தில் ஒரு வரலாற்று சம்பவத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். வெள்ளையர் ஆட்சியில் ஒத்துழையாமை இயக்கம் பெரும் வீச்சோடு நடந்துகொண்டிருந்தது. அப்போது காவல் நிலையம் ஒன்றை மக்கள் புகுந்து தாக்கிவிட்டார்கள். உடனே மகாத்மாகாந்தி, ஒத்துழையாமை போராட்டத்தை நிறுத்தினார்.

சக காங்கிரஸ் தலைவர்கள், “தற்போது மக்கள் எழுச்சியுடன் போராடி வருகிறார்கள். இந்த நிலையில் போராட்டத்தை நிறுத்த வேண்டுமா” என்று கேட்டார்கள்.

அதற்கு மகாத்மா, “காவலர்களை, காவல் நிலையத்தைத் தாக்குவதை ஏற்க இயலாது. அந்நியநாட்டு காவலர்கள் என்று இப்போது இந்தத் தாக்குதலுக்கு நாம் துணை போனால், நாடு சுதந்திரம் அடைந்ததும் இதே  போன்றுதானே மக்கள் செயல்படுவார்கள். ஆகவே அராஜகத்தை ஏற்க முடியாது” என்று ஒத்துழையாமை இயக்கத்தையே நிறுத்தினார்.

அறிஞர் அண்ணா

இன்னொரு உதாரணம் அறிஞர் அண்ணா.

“அடைந்தால் திராவிட நாடு. இல்லையேல்  சுடுகாடு” என்று முழங்கினார். ஆனால் காலப்போக்கில் அமைதிப்பாதையை தொடர்வதே சரி என்று தனது தீவிரத்தைக் குறைத்துக்கொண்டார்.

“மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி” என்றவர், அதையும் அமைதியான வழியில் பெறவே முயன்றார்.

ஏனென்றால் தலைவர்களுக்குத் தெரியும்.. வீண் வன்முறைகளால், போராட்டங்களால் எந்தவிதத்திலும் நன்மை கிடைக்காது என்று.

அதையேதான் ரஜினி காந்தியும் கூறயிருக்கிறார்.

இதில் என்ன தவறு?

ஆம்… சீருடைப் பணியில் உள்ள காவலர்கள் தாக்கப்படுவதை தான் எந்த நிலையிலும் ஏற்க மாட்டேன் என்ற கருத்தை இரண்டாவது முறையாக அழுத்தமாக பதிவு செய்துள்ளார் ரஜினிகாந்த்.

” தேவையற்ற – வன்முறை – போராட்டங்கள் கூடாது. அப்படி நடந்தால் தொழில் வளர்ச்சி பாதிக்கப்படும்” என்று   ரஜினிகாந்த் கூறியதை குறை கூறுகிறார்கள். இதை ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவான பேச்சு என்கிறார்கள்.

அதே ரஜினிதான்,  “ஸ்டெர்லைட் ஆலை நடத்துவோருக்கு மனசாட்சி இருந்தால் இதன் பிறகும் அந்த ஆலையை இயக்க நினைக்க மாட்டார்கள்” என்றும் தெரிவித்துள்ளார்.

இதை வசதியாக மறந்துவிட்டார்கள்.

இந்த இடத்தில் தொலைக்காட்சிகள் பற்றியும் குறிப்பிட வேண்டும்.

ரஜினி நின்றால், நடந்தால், பேசினால்… அவ்வளவு ஏன் பேசாமல் இருந்தால் கூட அதையே விவாதமாக்கி வருகின்றன தமிழ் தொலைக்காட்சிகள். இந்த விவாதங்களில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் யாரும் கலந்து கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு இருப்பதால், அவர்கள் தரப்பில் யாரும் பங்கேற்பதில்லை. ஒரு சிலரை ‘டம்மி’யாக, உட்கார வைத்து ரேட்டிங்கை ஏற்றி வருகின்றன தொலைக்காட்சி நிறுவனங்கள்.

ரஜினியின் தூத்துக்குடி விசிட் குறித்து ஒரு டிவி விவாதத்தில், அரசு மருத்துவமனைக்குள் மீடியாவை ஏன் அனுமதிக்கவில்லை என்று ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. அரசு மருத்துவமனை வார்டுகளின் நிலை, அது இருக்கும் இடத்தின் அளவைத் தெரிந்தவர்கள் இப்படியெல்லாம் கேட்பார்களா என்று தெரியவில்லை. ரஜினியுடன் மீடியாவை அனுப்பி இருந்தால், குறைந்தபட்சம் 100 பேர் உள்ளே வர வேண்டி இருக்கும். அத்தனை பேரையும் அனுமதிக்க வாய்ப்பு இருக்கிறதா? அப்படி அனுமதித்தால் நோயாளிகளை துன்புறுத்திய ரஜினி என்று தானே சொல்வீர்கள்?

அதே தொலைக்காட்சி விவாதத்தில் அதிமுக சார்பில் பேசியவர்,  “எந்த முதல்வரும் மக்களைச் சுட்டுக்கொல்ல உத்தரவு தரமாட்டர்கள்” என்று சொன்னவுடன்,  மூத்த பத்திரிகையாளர் ஒருவரும், “’நான் முதல்வராக இருந்தால், ஒரு உயிர் கூட போகக்கூடாது என்று உத்தரவிட்டு இருப்பேன்” என்றார்.

உண்மைதான். துப்பாக்கிச்சூடு நடத்தப்படாமல் இருந்திருந்தால், உயிர்பலி நடந்து இருக்காது என்று மூத்த பத்திரிகையாளரால் உத்தரவாதம் தர முடியுமா?  அவ்வாறு உயிர்பலி நடந்து இருந்தால், அந்த எண்ணிக்கை இதை விட (13) அதிகமாகி இருந்தால் என்ன சொல்லி இருப்பீர்கள்.

காவல்துறை துப்பாக்கியை வைத்துக் கொண்டு என்ன செய்தார்கள்? கலவரத்தை அடக்க சுட்டிருக்க வேண்டாமா என்று இதே பத்திரிகையாளர்கள் கேட்டு இருப்பார்களே?  இதுபோல, ரஜினியால் வெற்றி பெற முடியாது, ரஜினிக்கு பொறுமை இல்லை, ரஜினிக்கு தகுதி இல்லை என வெவ்வேறு காரணங்களைச் சொல்லி விவாதிக்கும் தொலைக்காட்சிகள் இனிமேல் ரஜினி தொடர்பான விவாதங்களை மேற்கொள்ள மாட்டோம் என்று சொல்ல முடியாமா?

  • கட்டுரையாளர்: இனியன்